மணி பிளாண்ட்:


மணி ப்ளான்ட் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். குறைந்து பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். நல்லதொரு செடி. இதை வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். மணி ப்ளாண்ட் வளர்க்கும் போது அதற்கு கொஞ்சமாக தண்ணீரும் அத்துடன் சில துளிகள் காய்ச்சாத பாலும் ஊற்றி வந்தால் அது செழிப்பாக வளரும். கூடவே வீட்டில் உள்ளவர்களின் வருமானமும் உயரும் என்று வாஸ்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


வீட்டினுள் செடி வளர்ப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷனாகிவிட்டது. சிலர் பிரியத்தாலும், சிலர் பந்தாவுக்கும் இப்படி வீட்டினுள் இண்டோர் ப்ளான்ட்ஸ் வளர்க்கக் கூடும். அப்படியிருக்க வாஸ்து வல்லுனர்கள் வீட்டினுள் வளர்க்கப்படும் மணி பிளாண்ட் எனப்படும் பணச் செடியின் பின்னணியில் உள்ள பெரிய வாஸ்து சாஸ்திரத்தை முன்வைத்துள்ளனர். அதில் குறிப்பாக நீங்கள் யாருக்காவது செடியை பரிசாகக் கொடுக்க விரும்பினால் மணி ப்ளான்டை கொடுக்காதீர்கள் என்று கூறுகின்றனர் வாஸ்து வல்லுனர்கள்.


இதோ அதற்கான விளக்கம்:


மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள்:


வாஸ்து சாஸ்திரத்தின்படி மணி ப்ளான்ட் என்பது லட்சுமியின் அடையாளம். இதனை மற்றவர்களுக்கு கொடுத்தால் அது வெள்ளிக் கோளின் கோபத்தைத் தூண்டுவதாக அமைந்துவிடும். வெள்ளிக் கோள் என்பது வளம் மற்றும் நலத்தின் அடையாளம். அதனால் இந்தச் செடியை நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்தால் லட்சுமி தேவியின் அருளும் வெள்ளிக் கோளின் அருளும் உங்களிடமிருந்து பறிபோய்விடும் என்று எச்சரிக்கின்றனர். 


இலைகள் வாடக்கூடாது:


மணி ப்ளான்டின் இலைகளை எப்போதும் பசுமையாக வைத்திருக்க வேண்டும் . எனவே அவ்வபோது  காய்ந்து போகும் இலைகளை கத்தரிக்க வேண்டும்  வாடிய இலைகள் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன. தினமும் இரண்டு முறை தண்ணீர் விட மறந்துவிடாதீர்கள். இது தவிர,  மணி ப்ளான்டின் கொடிகளை ஒருபோதும் தரையில் படரவிடக் கூடாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இது எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் வீடுகளில் மந்தமான சூழலுக்கு வழிவகுக்கும். மணி ப்ளான்ட் வளர வளர அதனை கயிறு கட்டி மேல்நோக்கி வளரச் செய்ய வேண்டும்.


வீட்டிற்கு வெளியே வளர்க்கக் கூடாது:


மணி பிளான்டை வீட்டிற்குள்ளேதான் வளர்ப்பார்கள் சிலர் பால்கனியில் வளர்ப்பார்கள். ஆனால் வீட்டிற்கு வெளியில் வளர்க்கலாமா? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு வாஸ்து வல்லுநர்கள் மணி பிளான்டை வீட்டிற்கு வெளியே கண்டிப்பாக வளர்க்கக் கூடாது எனக் கூறுகின்றனர்.  மணி பிளான்டை வீட்டிற்குள்  வைப்பதால் பெரிய நன்மைகள் உள்ளது என நம்பப்படுகிறது. இருப்பினும், தாவரத்தை சரியான திசையில் நடவு செய்வது முக்கியம். மணி பிளான்டை சுற்றுப்புறத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.


எந்த திசையில் வளர்க்க வேண்டும்?


மணி ப்ளான்டை வீட்டினுள் வளர்க்கும் போது அதனை வளர்க்கும் திசையும் அவசியம் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை ஒருபோது வடகிழக்கு திசையை நோக்கி வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் அது பண இழப்பை ஏற்படுத்தும். வடகிழக்கு திசை நோக்கி வைத்தால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள், விளைவுகள் உருவாகும். அதனால் எப்போதுமே தென் கிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும். இந்த திசை நோக்கி தான் விநாயகர் வீற்றிருப்பதால் இது மங்கலம் உண்டாகச் செய்யும். விநாயகரின் அருள் நிறைவாகக் கிடைக்கும்.  


 பணச் செடிகளை நடுவதன் மூலம் குடும்பத்தில் செழிப்பும், நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. அறிவியல் கூற்றுப்படி , இது காற்றில் இருந்து தீங்கு விளைவிக்கும் அசுத்தங்களை நீக்குகிறது மற்றும் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துகிறது.