இளநிலை அதிகாரிகள், மற்ற தர வரிசைப் பணிகள், அக்னி வீரர்கள் தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட நடைமுறை குறித்த அறிவிக்கையை இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இதன்படி ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது:


 இளநிலை அதிகாரிகள், மற்ற தர வரிசைப் பணிகள், அக்னி வீரர்கள் தேர்வுக்கான நடைமுறை மாற்றியமைக்கப்பட உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ஆள் தேர்வு நடைமுறையின்படி, ஆள் தேர்வு அணிவகுப்புக்கு முன்பாக கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (Computer based Online Common Entrance Exam - CEE) நடத்தப்படும்.


பதிவுக்கான அறிவிக்கைகள்  www.joinindianarmy.nic.in.  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வாயிலான பதிவுகளை பிப்ரவரி 16 முதல், மார்ச் 15, 2023 வரை மேற்கொள்ள முடியும்.  


3 கட்டங்களாகத் தேர்வு


* ஆள் தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும். 


* முதல் கட்டத்தில், அனைத்து விண்ணப்பதாரர்களும் கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.


* இரண்டாவது கட்டத்தில், தொடர்புடைய ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் உடற்தகுதி தேர்வு மற்றும் உடல் அளவு தேர்வு ஆகியவற்றில் கலந்துகொள்ள வேண்டும்.


* மூன்றாவது கட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டும்.


எப்போது தேர்வு?


கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு ஏப்ரல் 17 முதல், ஏப்ரல் 30, 2023 வரை நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் சுமார் 175 முதல் 180 தேர்வு மையங்களில் நடத்துவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.  


கூடுதல் விவரங்களுக்கு:  www.joinindianarmy.nic.in. 


ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி மற்றும் தயாராவது எப்படி என்று தெரிந்துகொள்ள www.joinindianarmy.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


அல்லது தேர்வர்கள் https://www.youtube.com/channel/UCrxs8lC1lJDShdbFSykbdmA என்ற யூடியூப் பக்கத்தை க்ளிக் செய்து பார்க்கவும். 


ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேர்வருக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணம் ஆகும். இதில் 50 சதவீதக் கட்டணத்தை இந்திய ராணுவம் ஏற்கும். இதனால் ஆன்லைன் விண்ணப்பப் பதிவின்போது தேர்வர்கள் ரூ.250 செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். நுழைவுத் தேர்வுக்கான தேர்வு மையங்களுக்கு 5 இடங்களைத் தேர்வர்கள் தெரிவு செய்யலாம். 


எதனால் இந்த மாற்றம்?


பணிக்குத் தேர்ந்தெடுக்கும்போது சிறப்பான முடிவைக் கொடுக்கவும் வேலைவாய்ப்பு முகாம்களில் அதிகக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் ஆன்லைன் வழியிலான பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செயப்பட்டுள்ளளது. இதன்மூலம் மத்திய அமைச்சகத்தின் நிர்வாகப் பளுவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


இதையும் வாசிக்கலாம்:


பொதுத் தேர்வுக்குத் தயாராகும் 10, 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, அனைத்து பாடங்களுக்கான மாதிரி வினாத் தாளைக் காணலாம்.