விநாயகர் சதுர்த்தி வந்தாச்சு...கொண்டாட்டம்தான். மோதகப் பிரியன், பிள்ளையார், விநாயகர் என அழைக்கப்படுபவருக்கு கொழுக்கட்டையும் சிறப்பு வழிபாடு செய்து கொண்டாடப்படும் நாள் பிள்ளையார் சதுர்த்தி. 
 வட மாநிலங்களில் பத்து நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சதுர்த்தி தினம் அன்று விநாயகர் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. 


விநாயகர் சதூர்த்தி


எண்ணிய செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் இருக்க வணங்கப்படுபவர் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான் என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. சதுர்த்தி தினத்தில் சிறப்பு வழிபாடு செய்து அவருக்கு பிடித்ததாக சொல்லப்படுவதை செய்து வழிபாடு நடத்தப்படும். 


ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி  கொண்டாடப்படுகிறது. பிள்ளையார் சதுர்த்தி என்றாலே நம் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை. முதலில் வீடு, கோயில் அல்லது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து கொண்டாட்டம் நடைபெறும்.


பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, பஞ்சாமிர்தம், வாசனை எண்ணெய்களால் விநாயகரைக் குளிப்பாட்டி அலங்கரித்து பாசுரங்கள் மந்திரங்கள் ஓதி வணங்குவர். பிள்ளையார் உருவங்களை களி மண்ணால் பிடித்தும், சிலைகள் நிறுவியும், மோதகம், சுண்டல் அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து அவரை வணங்கி மக்கள் மகிழ்கின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாக்களில் மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும், அனைத்து வயதினரும் பங்கேற்கின்றனர். குறிப்பாக வட இந்திய மக்கள் ஆடிபாடி பட்டாசுகள் வெடித்து  விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகின்றனர்.


நீங்களும் உங்கள் வீடுகளில் அலங்காரம் செய்ய, குறைந்த செலவில் அழகாக வீட்டை மாற்ற எளிதான ஐடியாக்கள் இதோ!


வண்ண பேப்பர் இருக்க கவலை ஏன்?


ஸ்டேஸ்னரி கடைகளில் வண்ண காகிதங்கள் கிடைக்கும் அதை வைத்து இலைகள், பூக்கள், மாவிலை தோரணம் போன்று செய்து வீடு முழுக்க அலங்கரிக்கலாம். காகித பூக்கள் செய்து மாலை செய்யலாம். இது விநாயகர் சதுர்த்தி அன்று கொண்டாட்டத்தோடு மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் பயன்படும். விட்டை அலங்காரம் செய்ய உதவும்.


விநாயகர் வைக்க போகும் மேஜையை அழகான துணி வைத்து அதன் மேல் விநாயகர் சிலையை வைக்கலாம். அட்டைப் பெட்டி இருந்தால் அதில் கோயில், கோபுரம் என செய்து அதற்குள் விநாயகர் சிலையை வைக்கலாம்.


மலர்கள் கொண்டு அலங்கரிக்கலாம். குறைந்த ஒளி தரக்கூடிய விளக்குகளை (சீரியல் லைட்ஸ்) பயன்படுத்துவது இன்னும் அழகு சேர்க்கும். இந்த விளக்குகள் உங்கள் வீட்டில் ஒரு இடத்தில் வைத்துவிட்டால் உங்களுக்கு தேவைப்படும் போது அதை எரியவிடலாம். மனதிற்கு ரிலாக்ஸாக இருக்கும்.


அட்டைப் பெட்டிகள் இருந்தால் அதில் ஓம் என்ற வடிவத்தை உருவாக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் இதை செய்ய சொன்னால அவர்களுக்கும் புத்துணர்ச்சியாக மகிழ்ச்சியாக உணர்வார்கள்.


காகிதங்களை கொண்டு மரங்கள் தயாரித்து அதற்கு கீழே விநாயகர் சிலையை வைத்து வழிபடலாம்.


வண்ண வண்ண துணி, காகிதங்கள், மலர்கள், மெழுகுவர்த்தி, விளக்குகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உங்களுக்குப் பிடித்தவாறு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இதை செய்வது சிறந்தது. 


பொங்கல், தீபாவளிக்கு மட்டுமல்ல விநாயகர் சதுர்த்திக்கும் ரங்கோலி சிறப்பான அலங்கரமாக இருக்கும். பிரதான நுழைவாயில், பூஜை அறை ஆகிய இடங்களில் பல வண்ண நிறங்களைக் கொண்டு பெரிய அளவிலான ரங்கோலிகளை வரையலாம். ரங்கோலியை மேலும் பிரகாசமாக்க பூக்கள் அல்லது விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கலாம். 


பூக்களை கொண்டு அலங்காரம் செய்வது நேர்மறையான எண்ணங்களை தரும் என்று சொல்லப்படுகிறது. 


எது சிறந்தது:


வாஸ்து சாஸ்திரத்தின்படி, வெள்ளை நிற விநாயகர் சிலை வீட்டில் செய்யும் பூஜைக்கு நல்லதென கூறப்படுகிறது. வெள்ளை நிற விநாயகர் அமைதி மற்றும் செழிப்பின் உருவமாக கருதப்படுகிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மண்ணாலான சிலைகளை பயன்படுத்துமாறும் சொல்கின்றனர்.


விநாயகர் சதூர்த்தி நாளில் எல்லா நன்மைகளும் கிடைக்க வாழ்த்துகள்.