நிறைய பெண்களுக்கு அவர்களுடைய பிறப்புறுப்புகள் பற்றி நிறைய கேள்விகள் இருக்கும். ஆனால் அது எதற்குமே சரியாக விடை கிடைப்பது இல்லை.
எந்த மாதிரியான உள்ளாடைகளை உபயோகிக்கலாம்?
உள்ளாடைகளில் நிறைய வகை இருக்கு.காட்டன், சாட்டின் என பல மெட்டீரியல்களில் கிடைக்கும். இதில் சிறந்தது என்றால் காட்டன்தான். காட்டனில் காற்றோட்டம் அதிகமாக இருக்கும்.அதனால் வியர்வை தங்காது, பாக்டீரியா தங்காது. அதனால் தொற்று ஏற்படுவதும் குறையும்.
பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதிகளில் இருக்கும் ஹேர் என்பது மிகவும் சங்கடமான ஒன்றாகவே பலருக்கு இருக்கிறது. அதை நீக்குவதிலும் சிலருக்குச் சிக்கல் இருக்கிறது. இந்த முடியை பாதுகாப்பாக நீக்குவது எப்படி?
’ட்ரிம் செய்வதுதான் பெஸ்ட். பிறப்புறுப்பில் நாம் மேலோட்டமாகத்தான் முடியை நீக்குகிறோமே ஒழிய மொத்தமாக ஷேவ் செய்வது இல்லை. மொத்தமாக ஷேவ் செய்வது முடியின் வேருக்கு பிரச்னையை ஏற்படுத்தும்.அதனால் இதனை முடிந்தவரை தவிர்க்கலாம். மேலும் ஷேவ் செய்த பிறகு உபயோகிக்கும் க்ரீம்கள் சருமத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை. பிறப்புறுப்பு சதைப்பகுதி சென்ஸிட்டிவ்வானது என்பதால் சிலருக்கு க்ரீம் உபயோகிப்பது கருப்பாக மாறிவிடும்.ட்ரிம் செய்வதற்கு கூட ரேசர் உபயோகிப்பவர்கள் ஏதிர் திசையில் இல்லாமல் நேர்திசையிலேயே ட்ரிம் செய்வது நல்லது.
பிறப்புறுப்பை சுத்தம்செய்வது (Vaginal Cleansing) நல்லதா?
பிறப்புறுப்பை சுத்தம்செய்வது என்றால் பிறப்புறுப்புப் பாதையை சுத்தம் செய்வது அல்ல வெறும் மேல்பகுதியான வல்வாவை மட்டும் சுத்தம் செய்வது. பிறப்புறுப்பு அது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும், அதற்கு அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் உதவுகின்றன. வல்வாவை சுத்தம் செய்வதற்கு வெறும் சாதாரண சோப் நீரே போதுமானது. எப்போதும்போல நமது உடலைச் சுத்தம் செய்வது போல இந்தப் பகுதியை சுத்தம் செய்துகொள்ளலாம். வஜைனல் வாஷ்கள் உபயோகிப்பவர்கள் உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உபயோகிப்பது நல்லது. அதுபோல உங்களது ஆசனவாய் பகுதியையும் அதனுடன் சுத்தம் செய்பவர்கள் வல்வாவில் இருந்து ஆசனவாய் பகுதியென மேலிருந்து கீழாக சுத்தம் செய்ய வேண்டும். கீழிருந்து மேலாகச் செய்வதால் பாக்டீரியாக்கள் ஆசனவாயில் இருந்து வல்வா பகுதிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
வெள்ளைப்படுதல் இயல்பானதா, எப்போது மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்?
மாதவிடாயின் நான்கு சைக்கிள்களிலும் பிறப்புறுப்பில் இருந்து வெவ்வேறு வகையில் திரவங்கள் வெளியேறும். முதல் இரண்டு வாரங்களில் கடைசி இரண்டு வாரங்களிலும் வறண்டுபோன திரவமும் அல்லது க்ரீமான திரவமும் வெளியேறும் இது ஃபெர்டைலான காலகட்டம் கிடையாது. இடையில் ஓவுயூலேஷன் காலகட்டத்தில் முட்டையின் வெள்ளைக்கரு போன்ற கொழகொழப்பில் திரவம் வெளியேறும் இது முற்றிலும் ஆரோக்கியமானது. இந்த திரவம் உள்ளாடையில் படுவதால் ஒருவித வாசனை உண்டாகும் அதுவும் இயல்பானதே இது தவிர்த்து திரவம் வெளியேறும்போதே ஒருவித வாசத்துடன் வெளியேறுவது அல்லது திரவம் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது, நுரைபோல வெளியேறுவது போன்றவை இயல்பானது அல்ல. இந்த சமயங்களில் மருத்துவரை அணுகுவது நல்லது.