உடல் எடை குறைப்பதற்காக பல்வேறு உடற்பயிற்சிகள், பல்வேறு வகையான டயட்கள் முதலானவற்றைக் கடைப்பிடிக்கிறோம். எனினும், எடை குறைப்பு அவ்வளவு சவாலானது அல்ல; மேலும் அதனை எளிதாக அடையலாம். நமக்கு பிடித்த உணவு வகைகளைத் தியாகம் செய்து, சத்தான உணவு வகைகளுக்கு மாற வேண்டும். அப்படியொரு சத்தான உணவாக, உடல் எடையைக் குறைக்க பயன்படுவது சைலியம் உமி. 

Continues below advertisement


இசாப்கல் என்று அழைக்கப்படும் சைலியம் உமி பிளாண்டாகோ செடியின் விதைகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இது மலச்சிக்கலுக்குத் தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சைலியம் உமி கணையம், இதயம், குடல் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கு நல்லது. இது உமி வடிவிலும், மாத்திரைகள் வடிவிலும் உலகம் முழுவதும் விற்கப்படுகிறது. 


சைலியம் உமி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருப்பதால், அது உணவு செரிமானத்திற்குப் பயன்படுகிறது. மேலும், உடலின் க்ளுகோஸ், கொழுப்பு, ட்ரைக்ளிசரைட் ஆகியவற்றின் அளவைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. 



சைலியம் உமி நார்ச்சத்து மிக்கதாக இருக்கிறது. இது குடலில் உணவு செரிமானமாகும் பணியை எளிதாக்குகிறது. மேலும், நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால் நமக்கு எளிதில் பசி ஏற்படாமல் இருக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க முடியும். 


சைலியம் உமி பெருங்குடலைச் சுத்தம் செய்கிறது. பெருங்குடல் சுத்தமாக இருப்பது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடையாளம். சைலியம் உமி நோய் எதிர்ப்பைத் தருவதோடு, நோய்களை அதிகம் தாங்கும் ஆற்றலைத் தருகிறது. நோய் எதிர்ப்பு அதிகரிக்கப்படும் போது, அது உடல் எடைக் குறைப்பில் அதிகம் பயன்படுகிறது. 


சைலியம் உமியில் குறைந்தளவிலான கலோரிகள் இருப்பதால் இது உடல் எடைக் குறைப்புக்கு அதிகம் பயன்படுகிறது. கலோரிகள் குறைவான உணவுகளை உண்பதால் உடலில் எடை குறையும். 



சைலியம் உமி பசியைக் குறைக்க உதவும். சைலியம் உமியையும் தண்ணீரையும் கலந்து சாப்பிடும்போது, அது சுமார் பத்து மடங்கு விரிவடைவதோடு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. 


சைலியம் உமியை உண்பது உடல் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பை அளிக்கிறது. மேலும் சைலியம் உமி பெருங்குடலைச் சுத்தம் செய்து, உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. மேலும் கொழுப்பு அதிகம் எரிக்கப்பட்டு, உடலில் எடைக் குறைப்பு படிப்படியாக நிகழ்கிறது. 


எனினும் சைலியம் உமி உண்பதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை எச்சரிக்கையுடனே உண்ன வேண்டும். தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொருத்து, பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முறையோ, இரு முறையோ மட்டுமே சைலியம் உமியை உட்கொள்ள வேண்டும். சைலியம் உமியை விழுங்குவதற்கு முன்பு, அதன் தூளை தண்ணீரிலோ, பழச்சாறிலோ கலந்துவிட வேண்டும். ஒரு நேர உணவு உண்ட பிறகு சைலியம் உமியை உண்பது சிறந்தது. தீவிர நோய் உள்ளவர்களும், கர்ப்பிணிகளும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இதனை உண்ணக் கூடாது.