வீட்டில் ஏசி வைத்திருப்பது லக்ஸுரி என்ற காலம் போய் எசன்ஷியல் என்ற காலம் வந்துவிட்டது. நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏசி சாத்தியமாகியுள்ளது. கோடை வந்துவிட்டாலே போதும் ஏசி விளம்பரங்களும் கூடவே வந்துவிடும். ஈஸி இஎம்ஐ, நோ காஸ்ட் இஎம்ஐ என்ற ஆஃபர்கள் வந்துவிட்டதால் எல்லோரும் கோடையில் ஏசி வாங்கும் வழக்கத்துக்கு வந்துவிட்டனர்.
அதற்கேற்றவாறு மிடில் க்ளாஸ் மக்களின் கையைக் கடிக்காதவாறு ஏசிக்களும் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு நான் விடிய விடிய ஏசி போடுவேன் என்று போட்டீர்கள் என்றால் அது பர்ஸைப் பதம் பார்க்கும் என்று கூறுகிறார்கள்.
ஆக, உங்கள் வீட்டு ஏசி பில்லைக் குறைக்க இதோ சில டிப்ஸ்:
1. சரியான வெப்பநிலையைத் தேர்வு செய்யுங்கள்..
சிலர் ஏசி வெப்பநிலையை 16 டிகிரிக்கு வைக்கின்றனர். அதுதான் நல்ல கூலிங் தரும் என நம்புகின்றனர். ஆனால் அது உண்மையல்ல.
ஏசியை எப்போதுமே மிகக்குறைந்த வெப்பநிலைக்கு செட் செய்யாதீர்கள். பிஇஇ (Bureau of Energy Efficiency (BEE) என்ற அமைப்பின்படி ஏசியை எப்போதும் 24ல் வைப்பதுதான் சிறந்தது எனக் கூறப்படுகிறது. அதனால் ஏசி குறைந்த அழுத்ததை மட்டுமே ஏற்றுக் கொள்ளுமாம்.
2. பவர் பட்டனை அனைத்துவிடுங்கள்..
ஏசி பயன்பாட்டில் இல்லாவிட்டால் பவர் பட்டனை அனைத்துவிடுங்கள். இது ஏசிக்கு மட்டுமல்ல எல்லா மின் சாதனங்களுக்குமே பொருந்தும். சிலர் ஏசியை ரிமோட்டில் மட்டுமே அனைத்துவைப்பர். இதனால் கம்ப்ரஸர் ஐடல் லோட் எனப்படும் மின்சாரப் பயன்பாட்டில் இருக்கும். இது நிச்சயமாக மின் கட்டணத்தை அதிகரிக்கும்.
3. டைமர் யூஸ் பண்ணுங்க..
ஏசி அதிகப்படியாக பயன்பாடு இல்லாமல் இருக்க டைமரைப் பயன்படுத்துங்கள். பகல் முழுவதும், இரவு முழுவதும் என ஏசி ஓடுவதற்குப் பதில் 2ல் இருந்து 3மணி நேரம் ஓடும்படி டைமர் செட் செய்யலாம். இதனால் ஏசியை அதிகப் பயன்பாட்டுக்கு உட்படுத்துவது குறையும். இதனால் உங்களின் மின் கட்டணமும் கணிசமாகக் குறையும்.
4. ஏசியை அவ்வப்போது சர்வீஸ் செய்யுங்கள்
ஏசியை அவ்வப்போது சர்வீஸ் செய்யுங்கள். மாதக்கணக்கில் பயன்படுத்தாமல் போட்டு வைக்காதீர்கள். அதனால் அதில் தூசி அடையலாம். தூசி மெஷினை கோளாறாக்கலாம்.
5. கதவு, ஜன்னலை சரியாக மூடுங்கள்..
உங்கள் வீட்டில் ஏசி உள்ள அறையின் கதவு, ஜன்னலை சரியாக மூடி வையுங்கள். எப்போது ஏசி அறையில் ஜன்னல், கதவிற்கு கனமான ஸ்க்ரீன் போடுங்கள். இதனால் அறை வேகமாகக் குளிர்ந்துவிடும். உங்கள் மின் கட்டணமும் குறையும்.
மின் சாதனங்களை சமஜோஜிதமாகப் பயன்படுத்தினால் மின் கட்டணத்தையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.