ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டுகிறார்.




தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது.




இந்த அகழாய்வு பணியில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது.தற்போது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமுக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.




இந்த நிலையில் அகழாய்வு பணியில் ஒரு கல்வட்டத்தின் நடுவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரே முதுமக்கள் தாழியில் இரண்டு மூடிகள் இருந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் இரண்டு மண்டை ஓடுகள் கிடைத்தது. மேலும் அதனுடன் கை, கால் எலும்புகள், முதுகெலும்பும் இருந்தது. இதனோடு சிறு சிறு பானைகளும், இரும்பால் ஆன உளியும் கண்டுபிடிக்கப்பட்டது.


இதில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மண்டை ஓடுகளும் கணவன் மனைவியா? அல்லது தாய் குழந்தையா? என்று தெரியவில்லை. இதற்குரிய ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்து இதற்கான தகவல் விரைவில் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதற்கிடையில் தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்ற 'பி' மற்றும் 'சி' சைட் பகுதியில் அகழாய்வு குழிகளுக்கு மேல் கண்ணாடி தளம் அமைத்து, அங்கு கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி மக்கள் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளையும் மத்திய அமைச்சர் பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.


ஆதிச்சநல்லூரைப் போலவே தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்கோளூர், அகரம், ஆகிய இடங்களில் அகழாய்வு நடக்கிறது. இங்கு கண்டெடுக்கப்படும் பொருட்களும் அருங்காட்சியகத்தில் இடம்பெறும்.