Love Movie Review in Tamil: ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் லவ். இந்தப் படத்தில் பரத் வாணி போஜன் விவேக் பிரசன்னா பிக் பாஸ் டானி ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ரோனி ரபேல் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் இரண்டும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ளது அதன் விமர்சனத்தை இங்கு காணலாம். 


படத்தின் கதை 


தம்பதிகளான பரத் - வாணிபோஜன் இடையே ஒரு நிகழ்வில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆகிறது. இதில் பரத்தின் கோபத்தினால் வாணிபோஜன் கொல்லப்படுகிறார். அவரது உடல் பாத்ரூமில் மறைத்து வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பரத் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். 


அப்போது அந்த வீட்டுக்குள் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக குழப்பத்தில் இருக்கும் நண்பர் விவேக் பிரசன்னா வருகிறார். அடுத்த சிறிது நேரத்தில் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருக்கும் பிக்பாஸ் டேனியும் வருகிறார். நடுவே வாணிபோஜனின் அப்பா ராதாரவியும் வந்து செல்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் விவேக் பிரசன்னா, டேனி இருவருக்கும் உண்மை தெரிய வருகிறது.உடலை எப்படி அப்புறப்படுத்துவது என யோசிக்கிறார்கள். அப்போது மீண்டும் கதவின் பெல் அடிக்கப்படுகிறது. திறந்து பார்த்தால் அங்கு வாணி போஜன் நிற்கிறார். 


அதேசமயம் விவேக் பிரசன்னா, டேனி இருவரும் காணாமல் போகிறார்கள். அப்படி என்றால் கொலை செய்யப்பட்டது யார்? .. நண்பர்கள் இருவரும் காணாமல் போக என்ன காரணம்.. இவற்றுக்கெல்லாம் என்ன தான் முடிவு  என்பதை லவ் படம் விளக்குகிறது.


நடிப்பு எப்படி? 


பரத் உடல் எடையை கூட்டி, அழகாக காட்சியளிக்கிறார். ஆனால் மனைவியை கொலை செய்த பயம் முகத்தில் இல்லாவிட்டாலும், உணர்வுகளிலாவது இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இல்லாதது மைனஸாக உள்ளது. இவரும் வாணிபோஜனும் அசல் கணவன் - மனைவி சண்டையை கண் முன்னால் நிறுத்துகிறார்கள். அதிலும் வாணிபோஜன் இறந்துப் போன நிமிடத்திலும் அழகான கண் சிமிட்டா பொம்மையாக காட்சியளிக்கிறார். ஒரு காட்சியில் வந்தாலும் பாசமிகு தந்தையாக ராதாரவி கேரக்டர் சிறப்பு. விவேக் பிரசன்னா, டேனி இருவரும் கொடுத்த கேரக்டருக்கு ஓரளவு நியாயம் சேர்த்துள்ளார்கள். 


படம் பார்க்கலாமா எப்படி? 


மலையாளத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான லவ் படத்தின் ரீமேக் தான் இப்படமாகும். படத்தின் மையக்கரு ஒரு பிரச்சினையை பற்றி பேசினாலும் தம்பதியினர் இடையே இருக்கும் ஈகோ பிரச்சினையை சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடங்கி, வீட்டுக்கு வீடு பிரச்சினை எப்படி மாறுகிறது மாறுகிறது என சொன்ன விதம் கவனிக்க வைக்கிறது. 


மேலும் மனைவியுடன் சண்டை ஏற்பட்டு கொலை வரை சென்ற பின்பு, தன் நண்பர்கள் இருவரின் குடும்ப பிரச்சினைகளுக்கு பரத் அட்வைஸ் பண்ணுவது நம்மை சுற்றி இருக்கும் “வீட்டில் புலி..வெளியே பசு” கேரக்டர்களை நியாபகப்படுத்துகிறது. தனக்கு பிரச்சினை ஏற்படும்போது பெண்களை குறை கூறுவது, பிரச்சினைக்கு வன்முறை தீர்வு தான் என நினைக்க வைப்பது என காட்சிகளை வைத்து  படம் முழுக்க வைத்துள்ளார்கள். யோசித்து பார்த்தால் இவை எல்லாவற்றிற்கும் “ஈகோ” தான் முழு பிரச்சினையாக வந்து நிற்கும். கதையில் இருக்கும் அழுத்தம் காட்சிகளில் மிஸ்ஸிங். 


ஆனால் முதல் அரைமணி நேரம் ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்தி, அதனை தொடர்ச்சியாக கொண்டு செல்லாமல் சொதப்பியுள்ளார்கள். இதேபோல் பிற்பாதியில் வாணி போஜன் மீண்டும் வரும்போது கதை சூடுபிடிக்கும் என எதிர்பார்த்தால் கடைசியில் இதுக்கெல்லாம் என்ன காரணம் என எளிதாக எண்ட் கார்டு போடுவது ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. 


ஆக மொத்தத்தில் படத்தின் பெயர் தான் லவ்.. ஆனால் உள்ளே ரணகளம்...!