திருச்சி மாநகர் திருச்சி -  திண்டுக்கல்  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த சுமார்  12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு என 30 ஆயிரம் பேருக்கு பிரியாணி தயார் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது.தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துறைமுருகன்,  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மற்றும் பல அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 




இந்த நிகழ்ச்சி மேடையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், “திருச்சி மாநகரில் வாக்குச்சாவடி வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் இங்கு வந்து பார்த்தால் இது பாசறை கூட்டம் அல்லது மாநாடு என்று சொல்வதா, அந்த அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளது. திமுக 15 மாவட்ட செயலாளர்கள், வாக்குச்சாவடிகள் பொறுப்பாளர்கள் கூட்டம் இத்தகைய பிரம்மாண்டமாக இருந்தால், தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய திமுக உடன் பிறப்புகளே அழைத்தால் மாநாடு எங்கே நடத்துவது எப்படி நடத்துவது?. அந்த அளவிற்கு பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்த அமைச்சர் நேருக்கு வாழ்த்துக்கள். மாநாடு நடத்துவதற்கே பிறப்பு எடுத்தவர் நேரு. அமைச்சர் நேரு மாநாடு எப்படி நடத்துவது என்று ஒரு புத்தகமே எழுதலாம். திமுக 100 ஆண்டுகளை கடந்த இயக்கம், திராவிட உயர்வுக்கு காரணமாக  இருந்தவர் கலைஞர் நம்மை விட்டு போய்விட்டார். கலைஞர் அவர்கள் இருந்தபோது திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள் இருந்தார்கள். தற்போது நமது தளபதி தலைவர் பொறுப்பேற்ற பிறகு 2 கோடி உறுப்பினர்களை உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளில் எவரும் செய்ய முடியாத சாதனை திட்டங்களை பொதுமக்களுக்காக நமது தலைவர் செய்துள்ளார். மக்களுக்கு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. 




மேலும் அகில இந்திய அரசியல் கட்சிகளில் சக்கர வியூகங்கள் உருவாக்கும் ஆற்றல் மிக்க ஒரே தலைவர் ஸ்டாலின். ஒரு காலத்தில் மன்னர்கள் போர் செல்வதற்கு முன்பு படை வீரர்களை அழைத்து பயிற்சி அளிப்பார். அதேபோல் நமது தலைவர் தற்போது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை அழைத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி பணியாற்றுவது என்பதை குறித்து பயிற்சி அளிக்கிறார் நிச்சயம் மாபெரும் வெற்றியை நமது கழகம் அடையும் என நம்பிக்கை உள்ளது. நமது தலைவர் எங்கு சென்றாலும் பொதுமக்கள் அவரை வரவேற்க புத்தாடைகள், பூங்கொத்துகள், வழங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக நலமாக இருக்கீங்களா என அவர்கள் கேட்கும் போது என்னை பிரமிக்க வைக்கிறது. இதையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மனுவை தேடி வாங்கும் முதலமைச்சராக இருக்கிறார். ஆகையால்  மனுவை தேடும் முதலமைச்சரை ஒரு மனுநீதிச் சோழனாக நம்முடன் இருக்கிறார். மாமனிதர் நமது தளபதி எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.


இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற முதல்வர் இல்லை . இந்த இயக்கம் அரசியலுக்காக உருவாக்கப்படவில்லை, ஆனால் நம் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு தேவையான வசதிகளையும், மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இந்த அரசியலில் நாம் இருக்கிறோம். குறிப்பாக மக்களை காப்பாற்ற வேண்டும் அதற்காக அரசியல் தேவை” என்றார்.