புகைப்படம் என்றாலே எல்லோருக்கும் ஸ்பெஷல் தான். நம் வாழ்வின் எதோ ஒரு சந்தர்ப்பத்தை நேரடியாக நினைவு படுத்தும் ஒரே விஷயமாக இந்த உலகில் உள்ளது. மனிதன் தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும் ஒரு சில கண்டுபிடிப்புகளில் புகைப்படம் ஒன்று. அப்படியாக பல நினைவுகளை, அழுகைகளை, உணர்வுகளை உலகெங்கும் தாங்கி நிற்கின்றன லட்சோப லட்ச புகைப்படங்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமின்றி புகைப்படம் முக்கியமான சமூக பிரச்சனைகளில் வகிக்கும் இடம் மிகப் பெரியது. பல கலவரங்களை, போர்களை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை பல புகைப்படக் காரர்களுக்கு உண்டு. 2003 குஜராத் கலவரத்தில் இருந்து வந்த புகைப்படம் ஆகட்டும், சமீபத்தில் மணிப்பூர் கலவரத்தில் இருந்து வெளிவந்த பெண்களின் நிர்வாண ஊர்வல புகைப்படம் ஆகட்டும்… வார்த்தைகள் கொண்டு செல்வதை விட அதிக மக்களுக்கு, அதிக ஆழத்துடன் விஷயங்களை கடத்துவதில் பெரும் பங்கு புகைப்படங்களுக்கு உண்டு. துக்கமும், இன்பமும், நினைவுகளும் எல்லாம் கலந்த இந்த புகைப்படங்கள் என்னும் விஷயத்தை கொண்டாட ஒரு தினம் தான் உலக புகைப்பட தினம்.
2023 உலக புகைப்பட தினத்தின் கருப்பொருள்
இந்த ஆ உலக புகைப்பட தினத்தின் தீம், லேண்ட்ஸ்கேப் ஆகும். worldphotographyday.com ஒரு பதிவில், "இந்த ஆண்டு உலக புகைப்பட தினத்தில், இயற்கை காட்சிகளில் நீங்கள் எடுத்த சிறந்த புகைப்படங்களைப் பகிருங்கள், மேலும் உங்கள் விருப்பப்படி சமூக ஊடகத் தளத்தில் #WorldPhotographyDay மற்றும் #WorldPhotographyDay2023 என ஹாஷ்டேக் இட மறக்காதீர்கள்," என்று எழுதியுள்ளது. அதன்படி நீங்கள் எடுத்த லேண்ட்ஸ்கேப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து இந்த தினத்தை கொண்டாடலாம்.
வரலாறு
உலக புகைப்பட தினத்தின் வரலாறு 1837 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அப்போது பிரெஞ்சுக்காரர்களான லூயிஸ் டாகுரே மற்றும் ஜோசப் நைஸ்ஃபோர் நீப்ஸ் ஆகியோர் முதல் புகைப்பட செயல்முறையான டாகுரோடைப்பை உருவாக்கினர். இந்த கண்டுபிடிப்பின் காப்புரிமையை பிரெஞ்சு அரசாங்கம் "உலகிற்கு இலவசமாக" வழங்கியது. இது தொடர்பான பொது அறிவிப்பு ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்பட்டது, அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.
முக்கியத்துவம்
உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்களை இணைக்கவும், தங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்ளவும், இந்த அற்புதமான கலையைப் பற்றிய கூடுதல் அறிவைப் பெறவும் இந்த தினம் பலரைத் தூண்டுகிறது. புகைப்படம் எடுத்தல் செயல்படுத்தும் கலைத்திறன் மற்றும் கதைசொல்லலை முன்னிலைப்படுத்துவதைத் தவிர, நமது அன்றாட வாழ்வில் புகைப்படக்கலையின் முக்கியத்துவத்தை இந்த நாள் நினைவுபடுத்துகிறது. நாமும் புகைப்படம் குறித்து புதிதாக ஒரு செய்தியை அறிந்து அல்லது புதிய புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இந்த தினத்தை கொண்டாடலாம்.