சந்திரயான் 3 விண்கலத்தின் புரபல்சன் பகுதியில் இருந்து பிரிந்து வந்த லேண்டரின் உயரம் குறைக்கும் பணி நேற்று வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது.


சந்திரயான் 3:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது. 






பின் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. 9, 14 மற்றும் 16 ஆம் தேதி என படிப்படியாக தூரத்தை குறைத்து நேற்றைய முன் தினம் புரபல்சன் பகுதியில் இருக்கும் விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புகைப்படத்தை இரண்டாவது முறையாக இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.


உயரம் குறைக்கும் பணியில் விக்ரம் லேண்டர்: 






அதேபோல் நேற்று முதல் முறையாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு குறைந்தபட்சமாக 113 கிலோமீட்டரும் அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நாளை மதியம் 2 மணியளவில் இரண்டாவது முறையாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கும் பணிகள் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இப்படி படிப்படியாக லேண்டரின் தூரம் குறைத்து அதிகபட்சமாக 100 கி.மீ குறைந்தபட்சம் 30 கிமீ வரை உந்தி தள்ளப்படும். ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இது ஒருபுறம் இருக்க, புரபல்சன் அமைப்பு தொடர்ந்து தற்போதுள்ள சுற்றுவட்டப் பாதையிலேயே சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பயணிக்கும்.  இந்த பயணத்தின்போது  அதில் உள்ள ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் மூலம் பூமியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்து மேகங்களிலிருந்து துருவமுனைப்பு மாறுபாடுகளை அளவிடும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இறுதிக்கட்ட பணிகள்: 


நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை படிப்படியாக குறைத்து, குறைந்தபட்ச தூரத்தை எட்டிய பின், லேண்டரின் அடிப்பகுதியில் இருக்கும் நான்கு குட்டி ராக்கெட்டுகள் லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க உதவும்.  அப்படி தரையிறக்கப்பட்டபின் அதிலிருந்து சிறிய சாய்தளம் வெளியே வரும். பின் விக்ரம் லேண்டரில் இருக்கும் பிரக்யான் எனும் ரோவர் சாய்தளத்தை பயன்படுத்தி வெளியே வரும். ரோவர் தான் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் கருவியாகும். தொடர்ந்து பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது, பல்வேறு தகவல்களை சேகரித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புவது தான் சந்திரயானின் இறுதி  கட்டமாகும்.