இன்றைய நவீன யுகத்தில், அனைவருமே பணத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். வீட்டு வாடகை அல்லது இஎம்ஐ மளிகை செலவுகள்,சேமிப்புக்கள் மற்றும் செலுத்த வேண்டிய கடன்கள் என ஒவ்வொருவருக்கும் பண தேவைகள் நிறைய இருக்கிறது. அலுவலகத்தை பொருத்தவரை இந்த மாதம் நிர்ணயித்திருக்கும் டார்கெட், வேலை முடியாமல் இருப்பது மற்றும் வேலையில் அடுத்த நிலைக்கு உயராமல் இருப்பது என ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவிலான மன அழுத்தத்தில் வாழ்ந்து வருகிறோம்.


இப்படியாக,அதிகப்படியான வேலைப்பளு,மன அழுத்தம்,குடும்ப தேவைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி என வீட்டில் இருக்கும் குடும்ப தலைவனும் தலைவியும் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றார்கள். இது மட்டும் இல்லாமல் டிவி, திரைப்படம்,பத்திரிகைகள்,பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் காணக்கூடிய செய்திகளைக் கொண்டும் மன அழுத்தத்திற்கோ அல்லது தேவை என்ற நிலைக்கு ஆளாகின்றோம். இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில், இவ்வாறு ஓடிக்கொண்டே இருப்பதினால், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருக்கும் தாம்பத்தியம், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.


இப்படியான மன அழுத்தம் காரணமாக,கார்டிசோல் மற்றும் எபிநெஃப்ரின் போன்ற ஹார்மோன்களின் வெளிப்பாடு அதிகமாகி,கணவன் மற்றும் மனைவி இருவர் இடையே,இருக்கும் தாம்பத்திய வாழ்க்கை, பெரிதும் பாதிப்படைகிறது.


ஆகையால், இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டால் மட்டுமே. சந்தோஷமான தாம்பத்தியத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஈடுபட முடியும். இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட, கீழ்க்கண்ட குறிப்புகள் உதவிகரமாக இருக்கும்.


ஆழ்ந்த உறக்கம்:


கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையில் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால்,ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் இருப்பது,பெண்களைப் பொறுத்தவரை,காலை 6 மணிக்கு எழும்பியதில் இருந்து,இரவு கணவன் வீட்டுக்கு வரும் வரையிலும், அவர்களுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கிறது. இதுபோலவே அலுவலகம் செல்லும் பெண்ணாக இருக்கும் பட்சத்தில்,காலை 6:00 மணிக்கு எழும்பியதிலிருந்து,இரவு சாப்பிட்டு படுக்கும் 11 மணி வரையிலும்,வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆக வீட்டில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும்,பெண்கள் மற்றும் ஆண்களை பொறுத்தவரை,சற்று ஏறக்குறைய போக்குவரத்திற்கு, மற்றும் வேலை செய்யும் நேரம் என, அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால், 12 மணிநேரம் வெளியிலேயே இருக்க வேண்டி இருக்கிறது.


ஆகையால் இரவு அவர்களுக்கு போதுமான உறக்கம் இருப்பதில்லை. இது நாளடைவில் மன அழுத்தம், கவன சிதறல், சோர்வு,எரிச்சல் மற்றும் வெறுப்புணர்வு  ஆகியவற்றை உண்டு செய்கிறது. இந்த மனநிலையில்,கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஆரோக்கியமான,சந்தோஷமான தாம்பத்யம் என்பது, சாத்தியப்படாமல் போகிறது. ஆகவே கூடுமானவரை 8 மணிநேரத்தை தூங்குவதற்காக ஒதுக்கி கொள்வது, கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் தலையாய கடமை.


விளையாட்டு அல்லது உடற்பயிற்சி:


கணவன் மற்றும் மனைவி இருபாலரும் ஏதாவது ஒரு விளையாட்டு, அல்லது உடற்பயிற்சி என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.வாரம் முழுமைக்கும் உங்களால் செய்ய முடியாவிட்டாலும் கூட,வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் என ஏதேனும் ஒரு விளையாட்டு அல்லது நடை பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி மற்றும் சைக்கிள் மிதித்தல் போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம்,மன இறுக்கத்தில் இருந்து வெளிவரலாம்.


உங்கள் அன்பானவர்களுக்கு நேரத்தை செலவிடுங்கள்:


கணவன் அல்லது மனைவி வேலைக்கு செல்பவராக இருந்தாலும், சரி வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். பொழுதுபோக்கு பூங்காக்கள்,மால்கள் அல்லது திரைப்படங்கள் என அவருடன் நேரத்தை செலவிட்டு,அவர்களுடன் கலந்துரையாடுங்கள்.இது உங்களின் மன இறுக்கத்தை மேலும் குறைக்கும். இது மட்டுமன்றி நமக்காக ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமும் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவி செய்யும்.கணவன் மனைவி இருவர் இடையே நெருக்கம் அதிகரிக்கும்.


மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம்:


ஒரு மனிதன் உணவில்லாமல் சில வருடங்கள் கூட உயிர் வாழ முடியும். நீர் அருந்தாமல் சில மாதங்கள் கூட உயிர் வாழ முடியும்.ஆனால் மூச்சுக்காற்று இல்லாமல் சராசரி மனிதர்கள்,ஐந்து நிமிடங்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. ஆகவே மூச்சுக்காற்று, பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. எந்த உயிரினம் ஆழ்ந்த, நீண்ட மூச்சை வெளிவிடுகிறதோ,அந்த உயிரினத்தின் ஆயுட்காலம் மிக அதிகம்.ஆகவே மனிதர்களாகிய நாம் மன இறுக்கத்தில் இருந்து விடுபட, மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வது, மிக சிறப்பான பலனைத் தரும்.


நுரையீரலில் இருக்கும் கழிவுகள் நீங்குவது மட்டுமல்லாமல்,உடம்பின் செல்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பது முதற்கொண்டு,ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம்,மன இறுக்கத்திலிருந்து எளிதாக விடுபட முடியும்.எனவே தகுந்த ஆசிரியரிடம், மூச்சுப் பயிற்சியை பயின்று,உங்கள் மனதை சாந்தப்படுத்துங்கள். இதைப் போலவே தியானமும்,உங்களை மன இறுக்கத்தில் இருந்தும்,மன அழுத்தத்தில் இருந்தும்,தினசரி கோப தாபங்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது.


மேற்கண்ட ஆலோசனைகளை கடைப்பிடித்து,மன இறுக்கத்தில் இருந்து விடுபட்டு,உங்கள் குடும்ப  வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.