அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திரைப்படத்தின் முதல் பாகம் உலகளவில் கொண்டாடப்பட்டதோடு பாக்ஸ் ஆபிஸில் 500 கோடியை வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் ஓடிக்கொண்டு இருப்பதால், அது மேலும் சில லட்சங்களை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி நடைபோடும் பொன்னியின் செல்வன் 1 :
பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் இந்தியாவில் மட்டுமே சுமார் ரூ. 327 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 169 கோடியும் ( $20.70 மில்லியன்), ஆக மொத்தம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 496 கோடியை வசூல் செய்துள்ளது. கோலிவுட் சினிமாவில் அதிகமாக வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. முதல் இடத்தில் இருக்கும் 2.0 படம் இந்தியாவில் மட்டும் ரூ. 508 கோடியும், உலகளவில் ரூ. 665 கொடியையும் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய சாதனையை முறியடித்தது :
தமிழ்நாட்டின் வசூலை வைத்து பார்க்கையில் பொன்னியின் செல்வன் 1 விக்ரம் படத்தின் வசூலை விடவும் 50 கோடி அதிகமாக வசூல் செய்துள்ளது. இதுவரையில் தமிழ்நாட்டில் வெளியான படங்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் திரைப்படமாக வெற்றி நடை போடுகிறது. கிட்டத்தட்ட 222 கோடி வசூலித்து முந்தைய சாதனையை முறியடித்து, அதை விடவும் 20% அதிகமாக வசூலித்துள்ளது.
வெளிநாடுகளிலும் வெற்றியை நிலைநாட்டியது :
தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட $21 மில்லியன் வசூலத்திற் முதல் கோலிவுட் சினிமா எனும் புதிய பெஞ்ச் மார்க்கை நிறுவியுள்ளது. வடக்கு அமெரிக்காவில் $6 மில்லியன், ஆஸ்திரேலியாவில் $1 மில்லியன், மற்றும் UK இல் £1 மில்லியன் என பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் உலகளவில் ரெக்கை கட்டி பறக்கிறது.
பார்ட் 2க்கு எதிர்பார்ப்பு அதிகம் :
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் மேலும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. முதல் பாகமே இத்தனை கோடி வசூல் சாதனை படைத்தது என்பதால் இரண்டாம் பாகத்தின் ரிலீஸை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 2023ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.