நாம் இன்று உண்ணும் உணவில் தெரிந்தோ தெரியாமலோ பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இது நமக்கு மட்டுமல்ல பூமிக்கும் மிகப்பெரிய சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவை பல நூறு ஆண்டுகளானாலும் மக்காமல் மண்ணிலே நிலைத்திருக்கும். இதனால் மழைநீர் உள்புகுவது தடுக்கப்படும்.


பழந்தமிழர் வாழ்வில் வாழையிலை


சூரிய ஒளி பூமிக்குள் ஊடுருவது தடுக்கப்படும். இதையெல்லாம் தெரிந்தோ என்னவோ தான் பைந்தமிழர்கள் மண்ணாலான பாத்திரங்களையும் வாழையிலைகளையும் பயன்படுத்தினார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. சமைப்பதற்கு மண்ணாலான பாத்திரங்களையும், சமைத்த உணவுகளை சாப்பிடுவதற்கு வாழை இலையையும் பயன்படுத்தினார்கள்.


பொதுவாக ஒரு வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் சிறப்பான பயன்பாட்டை தரும். வாழைப்பூ,வாழைத்தண்டு, வாழைக்காய் மற்றும் வாழைப்பழம் இவையெல்லாம் உண்ணும் உணவாகவும்,வாழை மட்டையை நன்கு காய வைத்து நூல் போல் ஆக்கி பூக்களை கட்டுவதற்கும் விலக்குகளில் தீபம் இடுவதற்கும் பயன்படுத்தினார்கள்.


உணவும் மருந்துமாய் விளங்கும் வாழை


"யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்ற முது மொழியைப் போல, வாழையின் அனைத்து பொருட்களும் நமக்கு ஆகச்சிறந்த மருந்தாக,உணவாக இருந்திருக்கிறது. இதிலும் குறிப்பாக விருந்தோம்பலில் பெயர் போன தமிழர்கள், "தலை வாழை விருந்து" என்று விருந்துக்கு தந்த அதே முக்கியத்துவத்தை வாழை இலைக்கும் தந்திருக்கிறார்கள்.


இந்த வாழை இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பி இருக்கின்றன. இளைப்பு என்று சொல்லப்படும் வீசிங்,மந்தத் தன்மை மற்றும் பித்தம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்கிறது என்பது சித்த மருத்துவத்தில் அனுபவத்தில் கண்ட உண்மை.


வாழை இலையில் உள்ள குளோரோபில் என்ற இயற்கைப் பொருள் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் வயிற்றுப் புண்ணை சரி செய்கிறது, சூடாக வாழை இலையில் போடப்படும் சோறானது வாழை இலையுடன் வினைபுரிந்து ஆகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.


வாழைத்தண்டு சாறு


இது எல்லாம் சித்த மருத்துவத்தில் அனுபவத்தில் கண்ட உண்மைகளாகும் வாழைத்தண்டு சாறு இன்றளவும் பாம்பு கடிக்கான நச்சு முறிப்பானாக  கிராமப்புறங்களில் பயன்படுகிறது. பிளாஸ்டிக் என்ற நச்சுப் பொருளிலிருந்து நம் வயிற்றையும் பூமியையும் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது .


ஆகையால் போகும் இடங்களில் எல்லாம் வாழை இலையை வேண்டும் என்று கேளுங்கள் இப்படி பத்து வாடிக்கையாளர் ஒரு ஓட்டலில் வாழையிலை இல்லையா என்று கேட்டால் அவர்கள் வாழை இலைக்கு மாறிவிடுவார்கள். இதன் மூலம் நாம் உண்ட பிறகு அந்த இலை கால்நடைகளுக்கு தீவனமாகவோ அல்லது குப்பையில் மக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு உரங்கள் செய்வதற்கோ பயன்படும். 


இதைப் போலவே வாழை இலைகளின் பயன்பாடு அதிகமாகும்போது விவசாயிகளுக்கான வாழ்வாதாரமும் அதைத்தொடர்ந்து பொருளாதாரமும் மேம்படும். இனி வரும் காலங்களில் கூடுமானவரை வாழை இலையை பயன்படுத்தி வாழையடி வாழையாக வாழ்வோம்.