சென்னை பெருங்குடியில் கழிவுநீர் உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். கிணற்றை சுத்தம் செய்துகொண்டிருந்த காளிதாஸ் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற சரவணன் என்பவரும் உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரை சேர்ந்தவர் சரவணன்(வயது49). இவர் திருவான்மியூரில் அச்சகம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் எதிரே உள்ள சுமார் 7 அடி கொண்ட உரை கிணற்றை சுத்தம் செய்ய முயன்றார்.
காப்பாற்ற முயன்றவரும் பலி
நீலாங்கரையை சேர்ந்த காளிதாஸ்(55) என்பவருடன் சேர்ந்து சரவணன் கிணற்றை சுத்தம் செய்த நிலையில், கிணற்றில் இருந்து வந்த விஷவாயு தாக்கியதில் காளிதாஸ் மயங்கி கிணற்றில் விழுந்தார். இதைக் கண்ட சரவணன் காளிதாசை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவருக்கும் விஷ வாயு தாக்கியதில் கிணற்றில் விழுந்தார்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஒடி வந்து கிணற்றில் விழுந்த 2 பேரையும் மீட்டனர். ஆனால் சரவணன், காளிதாஸ் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த துரைப்பாக்கம் காவல் துறையினர் விரைந்து வந்து 2 பேரின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துரைப்பாக்கம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் இருவர் பலி
சென்னை பெருங்குடியில் இதேபோல் கடந்த ஜூன் 30ஆம் தேதி அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 2 தொழிலாளர்களையும் மீட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டோர். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஐவர் பலி
சென்னையில் கடந்த ஜூன் மாத இறுதியில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னை, மாதவரத்தில் சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட கடந்த 27ஆம் தேதி நெல்சன் (26), ரவிக்குமார் (40) ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில், மெட்ரோ வாரியத்தின் ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து இறந்துபோன நெல்சனின் குடும்பத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்