உலகம் முழுவதும் எண்ணற்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. மதம் சார்ந்தும் மொழி சார்ந்தும் நிலம் சார்ந்தும் இடத்துக்கு இடம் விழாக்கள் மாறுபடுகின்றன. ஆனால் என்றுமே மாறாமல், எல்லா மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.


இடத்துக்கு இடம் மாறும் புத்தாண்டு நேரம்


உலகத்திலேயே முதன்முதலாக நியூசிலாந்து நாட்டில்தான் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. இந்திய நேரப்படி, டிசம்பர் 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தின் சமோவா பகுதியில் புத்தாண்டு பிறக்கிறது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் மாலை 6.30 மணி அளவுக்கு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.


சாதி, மத, மொழி வேறுபாடின்றி கொண்டாடப்படும் இந்த நன்னாள் எப்படி வந்தது தெரியுமா?


பழம் காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. ரோமானியப் பேரரசர் மார்ஷியஸ் (Ancus Martius) நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதம் முதல் மாதமாக இருந்தது. அதனாலும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் மார்ச் மாதம் 1ஆம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது.


அப்போது 7 முதல் 10ஆம் மாதங்கள் வரை செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் இருந்தன. லத்தீன் மொழியில் செப்டம் என்றால், 7 என்று அர்த்தம். ஆக்டோ என்றால் 8 என்று அர்த்தம். நவம் என்றால் 9 என்று அர்த்தம். டிசம் என்றால் 10 என்று பொருள். இதன் அடிப்படையில் மாதங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டன.




அதைத் தொடர்ந்து ரோமானிய மன்னரான போம்பிலியஸ், கடைசியில் கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். அவை 11, 12ஆம் மாதங்களாகச் சேர்க்கப்பட்டன. ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் மாதங்கள் சேர்க்கப்பட்டன. எனினும் பின்னாட்களில் அவை முதல் 2 மாதங்களாக மாற்றப்பட்டன.


ஜூலியன் காலண்டர்


புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில்தான் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்ததால், அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.


எந்தெந்த நாடுகள் எப்போது?


1564ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை ப்ரான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டாக ஏற்றுக் கொண்டது. ஜெர்மனி 1544ஆம் ஆண்டில் இருந்தும் ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் 1556ஆம் ஆண்டில் இருந்தும் ஜனவரி 1-ஐ புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றன. அதேபோல, ஸ்வீடன், நார்வே மற்றும் டென்மார்க் நாடுகள், 1599 முதலாகவும் ஸ்காட்லாந்து 1600 முதலாகவும் ஜனவரி 1-ஐ புத்தாண்டாக வரவேற்றன. ரஷ்யாவில் 1725 முதலாகவும் இங்கிலாந்து, வேல்ஸ், அயர்லாந்து மற்றும் பிரிட்டன் அமெரிக்க காலனிகள் 1752 முதல் ஜனவரி 1 ஆம் தேதியை புத்தாண்டு தினமாக ஏற்றுக்கொண்டன.




வான வேடிக்கைகள் வெடித்துச் சிதற, பட்டாசுகளோடும் இனிப்புகளோடும் புத்தாண்டை மக்கள் வரவேற்கின்றனர். மணம் வீசும் மலர்களைச் சொரிந்தும் புத்தாண்டைச் சிலர் தொடங்குகின்றனர். இந்த நாளில் புதுப்புது சபதங்களைப் பலர் ஏற்பதுண்டு.


ஆண்டுதோறும் ஜிம்முக்குச் செல்வேன், உடலைக் குறைப்பேன், ஆரோக்கியமான உணவுகளையே உண்பேன், கோபம் கொள்ள மாட்டேன், யாரையும் நோகடிக்க மாட்டேன் என்று ஆட்களுக்குத் தகுந்தாற்போல சபதங்களும் மாறுகின்றன. ஆனால் தொடர்ச்சியாக சபதங்களை நிறைவேற்றுவோர் எண்ணிக்கை, ஆண்டின் நாட்களைப் போல குறைந்துகொண்டே செல்வதுதான் ஆகச்சிறந்த நகை முரண்.