தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழ்நாடு அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறுகையில், "இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி பிப்ரவரி மார்ச் ஆகிய மூன்று மாத காலங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கட்சிக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட நடத்த வேண்டி பிப்ரவரி 28ஆம் தேதி கடலூரில் கோரிக்கை மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளை முதல்வர் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் அறிவிக்கவில்லை எனில் தேர்தலில் திமுக தலைமையிலான வெற்றி கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என எச்சரித்த அவர் சமூகநீதி பேசும் முதல்வர் தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார். திமுக தலைவர் எங்களுக்கு கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இல்லையென்றால் சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகளை அறிவிக்கப்படும் என்று கூறினார்கள்.
நிர்மலா சீதாராமனின் பேச்சு ஆணவமிக்கதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு ஜிஎஸ்டி மூலம் தமிழகத்தில் இருந்து பெரும் தொகையை வரியாக வசூலிக்கும் மத்திய அமைச்சகம் பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்க மறுக்கிறது. எனவே எதிர்வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார். இன்று மாலை முதல்வர் மற்றும் ஆளுநர் சந்திக்க உள்ள நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆளுநர் தலைமையில் செயல்படும் பல்கலைகழகத் துணை வேந்தர்கள் அரசு விதிகளை மீறி செயல்பட்டால் அவர்களை தமிழக அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.