வேகமாக மாறிவரும் உலகில் மனிதர்கள் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். நம்முடைய மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால் மட்டுமே நம்மால் சில விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். இல்லாவிட்டால் மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். இவை சமீப காலமாக சிறு வயதினர் தொடங்கி முதியவர்கள் வரை அதிகரித்து வருகின்றது. இந்த செய்தியைப் படிக்கும் நீங்கள் கூட அப்படி ஒருவராக இருக்கலாம்.
பல வழிகளில் ஏற்படும் மனச்சோர்வு
எந்தவொரு விஷயத்தைப் பார்த்தாலும் பயம், டென்ஷன், குழப்பம், அதிர்ச்சி என பலவிதமான வழிகளில் மனச்சோர்வு ஏற்படும். நாம் செய்யும் சில விஷயங்கள் மீண்டும் பிரச்னைகளில் இருந்து விடுபட்டு மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். தியானம் மற்றும் எளிய யோகா மூலம் மனச்சோர்வை தடுக்கலாம் என தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
மனச்சோர்வு
மனது ஒரே விஷயத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்க வைப்பதால் மனச்சோர்வு உண்டாகிறது. இது உங்களை உணர்ச்சி ரீதியாக பலவீனப்படுத்துகிறது. இந்த சிக்கலைக் குறைக்க தியானம் நல்லது என்று சொல்லப்படுகிறது. சுவாசம், உடல் உணர்வுகள், இயக்கம் அல்லது ஒலியில் கவனம் செலுத்துவதன் மூலம், மனதில் எதிர்மறை எண்ணங்கள் விலகி மகிழ்ச்சி இருக்கும் என நம்பப்படுகிறது. இதனைன் தொடர்ந்து செய்வதால் நம் மனநிலை மேம்படும். மன அழுத்தம் குறைந்து சிறந்த தூக்கம் கிடைக்கும். இதனால் உணர்வு ரீதியான சமநிலையுடன் நாம் இருக்க முடியும்.
இப்படி ட்ரை பண்ணுங்க
தியானம் செய்யும்போது, மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அன்றாடப் பணிகளைச் செய்யும்போது உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். உட்கார்ந்திருக்கும்போது, நடக்கும்போது அல்லது படுத்திருக்கும்போது நீங்கள் எப்படி சுவாசிக்கிறீர்கள் என்பதை உற்று நோக்கினால் அதன் மாற்றம் புரியும். இது உங்களை அறியாமலேயே எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட உதவும்.இது உங்கள் மன அமைதியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அதேசமயம் தியானத்தில் இருக்கும்போது மனதை அமைதிப்படுத்த மந்திரம் அல்லது ஒலி பயன்படுத்தப்படுகிறது. இசை ஆழ்ந்த தளர்வை அளிக்கிறது. இது மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது. வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல் அல்லது தோட்டக்கலை போன்ற பணிகள் உடலை முழுமையாக ஈடுபாட்டுடன் வைத்திருக்கும்போது மனம் அமைதியாகிறது.
(ஒருவேளை உங்களுக்கு பிடித்தவை அல்லது மேலே பரிந்துரைக்கப்பட்டவை செய்வதன் மூலம் தீர்வு கிடைக்காமல் தொடர்ந்து மன அழுத்த பிரச்னையில் அவதிப்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்)