காஞ்சிபுரம் மாவட்டம் இலப்பை கண்டிகை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட சிறுபான்மையர்கள் வசித்துவரும் நிலையில், வாக்குச்சாவடி பூத் அமைக்க கோரி உயர் நீதிமன்ற உத்தரவு நகலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி அமல்படுத்த கோரிக்கை விடுத்தனர்.

Continues below advertisement

வாக்குச்சாவடி மையம் திடீரென ரத்து

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இலப்பை கண்டிகை கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லிம் இன மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 365 தகுதியான வாக்காளர்கள் உள்ள நிலையில் இலப்பை கண்டிகை கிராமத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் வாக்குச்சாவடி மையம் திடீரென ரத்து செய்யப்பட்டு வளத்தூர் கிராமத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையத்தோடு இணைக்கப்பட்டு விட்டது. 

வாக்குச்சாவடி ரத்து செய்யப்பட்டு விட்டதால் இலப்பை கண்டிகையைச் சேர்ந்த வாக்காளர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வளத்தூர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இதனால் கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை இலப்பை கண்டிகை கிராமத்திலேயே வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி மையத்தை அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை அளித்தனர். 

Continues below advertisement

நீதிமன்றத்தில் வழக்கு

கிராம மக்களின் கோரிக்கையின் மீது மாவட்ட நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அதிமுக உரிமை மீட்பு குழுவின் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் ஆலோசனையன் பேரில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை மீண்டும் இலப்பை கண்டிகை கிராமத்தில் அமைக்க வேண்டும் என வழக்கு தொடுத்தனர்.

வழக்கு விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம் எஸ் ஐ ஆர் பணிகள் நிறைவு பெற்றவுடன் சட்டத்திற்கு உட்பட்டு இலப்பை கண்டிகை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்வி. ரஞ்சித் குமார் தலைமையில், இலப்பை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவின்படி ரத்து செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை இலப்பை கண்டிகை கிராமத்தில் மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் வழங்கினார்கள். கிராம மக்களின் கோரிக்கை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் திரும்பி சென்றனர்.