பத்து ரூபாய் நாணயங்களை பெரும்பாலான வங்கிகளே வாங்க மறுக்கக் கூடிய சூழ்நிலையில், பத்து ரூபா நாணயங்கள் செல்லும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆறு லட்ச ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்து அதை கொடுத்து கார் ஒன்றை வாங்கிய நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். சுய தொழில் செய்து வரும் வெற்றிவேல் கார் ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளார். இதனிடையே குழந்தைகள் சிலர் பத்து ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட வெற்றிவேல் இது குறித்து விசாரித்த போது அந்த நாணயங்கள் செல்லாது என்பதால் குழந்தைகளின் பெற்றோர் அதை விளையாட கொடுத்ததை அறிந்தார்.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற எந்த விதமான அறிவிப்பை கொடுக்காத நிலையில் பெரும்பாலான வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டதாக புரிந்துகொண்ட வெற்றிவேல் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தீர்மானித்துள்ளார். அதன்படி கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு வங்கிகளில் தனக்கு தேவையான பத்து ரூபாய் நாணயங்களை சேகரிக்க தொடங்கினார். தற்போது 6 லட்ச ரூபாய்கு 10 ரூபாய் நாணயங்களை சேகரித்த நிலையில், அதனை சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கார் விற்பனை நிறுவனத்தில் கொடுத்து புதிய கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.
பத்து ரூபாய் நாணயங்களை வாங்கக்கூடாது என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் கொடுக்காத நிலையில் ஒரு சில வங்கிகள் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்குவதில்லை என்று தங்கள் வங்கியில் அறிவிப்பு வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய வெற்றிவேல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நாணயங்களை வாங்க மறுக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த விழிப்புணர்வை பரவலாக்க வேண்டும் என்பதற்காகவே ஆறு லட்ச ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்து தனக்கு தேவையான காரை வாங்கியதாகவும் கூறுகிறார் வெற்றிவேல்.
இனியும் பத்து ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி தடை செய்யவில்லை என்பதை அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவர் மேற்கொண்ட இந்த முயற்சியானது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதேபோன்று கடந்த மார்ச் 26 ஆம் தேதி சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த யூடியூபர் பூபதி என்பவர் சேமிப்பை வலியுறுத்தி ஒரு ரூபாய் நாணயங்களை கொண்டு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரு சக்கர வாகனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.