தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து நிலைகொள்ளக்கூடும். அரபிக்கடலில் கோவா அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இரு புறங்களிலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் நிலவுவதால், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.




சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிககனமழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரகை்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிககனமழையும், சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிககனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.




காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளிலும் 2 நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், குடிநீர் மற்றும் பால் பாக்கெட்டுகளை போதியளவில் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கனமழை அபாயம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண