சமீபத்தில் நடிகை தமன்னா, தனக்கு ஏற்படும் பருக்களுக்கு காலை எழுந்ததும் பல் துலக்காமல் அந்த எச்சிலை வைப்பேன் என்று கூறியிருப்பது சர்ச்சை ஆனது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளதாவது:

’’தற்கால நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில்,  அனைவருமே அனைத்தையும் அறியலாம்.  கற்கலாம். மருத்துவத் துறை சார்ந்த அறிவியல் குறித்து கற்பதும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அதைக் கற்கும் திறன் அறிந்து, எதை நம்ப வேண்டும், எதை ஏற்கக் கூடாது  என்பதை அறிந்து கற்க வேண்டும். பிறருக்கு எடுத்துக் கூறுமுன் அதன் அறிவியல் பின்புலம்/ ஆதாரம் / ஆய்வு முடிவுகள் என்று அனைத்தையும் அறிந்து கூறலாம்.

மருத்துவர்களுக்கென பிரத்யேக அனுபவம்

மருத்துவர்களுக்கும் மருத்துவத் துறை பற்றி தொழில்நுட்ப உதவி கொண்டு கற்பவர்களுக்கும், இந்தத் தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்ட செயற்கை தொழில்நுட்பத்திற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்பது மருத்துவர்கள் தாங்கள் கற்றவற்றை தினசரி மனிதர்களிடம் முயற்சி செய்து பயிற்சி செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கென பிரத்யேக அனுபவம் உண்டாகிறது. இவ்வாறான அனுபவங்களை ஆய்வுகள் கொண்டு ஆவணப்படுத்துகிறார்கள்.

அத்தகைய ஆய்வுகளைத் தொகுத்து உருவாவதே பெரும்பான்மை மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் ஆகும். இங்கு எனக்கு ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விஷயத்தையோ, நான் கேள்விப்பட்ட விஷயத்தையோ, மருத்துவ அறிவுரை என்ற பெயரிலோ அல்லது நான் இதை கடைபிடிக்கிறேன் என்றோ வெளிக்கூற இயலாது.

இன்ஃப்ளுயன்சர் காலகட்டம்

இங்கு ஒருவரை ஒருவர் பார்த்து வயப்படுவது என்பது மறுக்க இயலாத உண்மை. வயப்படுவதை இன்ஃப்ளுயன்ஸ் ஆவது என்றும் அதைச் செய்பவர்கள் வயப்படுத்துபவர்கள் என்றும் அழைக்கப்படும் காலமிது.

தோற்றப் பொலிவுடன் இருக்கும் ஒருவர் இது போன்ற கருத்துகளை தான் செய்கிறேன் என்று கூறும்போது அதை வளர் இளம் பெண்கள் - மங்கையர் பலரும் கடைபிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இது போன்றே நான் செருப்பு போடாமல்தான் நடக்கிறேன் என்று பல கருத்துகளை தெரிந்தும் தெரியாமலும் அல்லது தெரிந்தே கூறுவதைக் காணமுடிகிறது.

இது சரி தவறு என்பது தனி வாதம், அதில் நான் செல்ல விரும்பவில்லை. ஆயினும் கூறும் விஷயத்தில் அறிவியல் பூர்வமான உண்மை இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டியது கடமை.. பொறுப்பாகும்.

இங்கே தமன்னா கூறியிருக்கும் முறை, பருக்கள் சார்ந்து பன்னெடுங்காலமாக மருத்துவத் துறை நவீனப்படும் முன்பு வழங்கப்பட்டு வரும் ஒன்றே ஆகும்.

பருக்கள் தோன்றி மறைவது இயல்பு

ஆனால் ஹார்மோன்களின் இயல்பான விளைவால் வளர் இளம் பெண்கள், ஆண்கள் , பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் சில பொழுதுகளில் பருக்கள் தோன்றி மறைவது இயல்பு. ஒருவேளை பருக்கள் அதிகமாக இருப்பின், அதற்குரிய முறையான மருத்துவ சிகிச்சையை வழங்க சரும நோய் சிறப்பு நிபுணர்கள் ( டெர்மடாலஜிஸ்ட்கள்) இருக்கிறார்கள்.

அவர்கள் பருக்களில் தொற்று ஏற்படாமல் இருக்க பாக்டீரியாக்கொல்லி களிம்புகள் , மாத்திரைகள் , பருக்களை கட்டுக்குள் வைக்கும் சிகிச்சையை வழங்குவார்கள். இது அறிவுப் பூர்வமானது.

புண்களுக்கு, சிராய்ப்புகளுக்கு மண்ணை அப்புவது, எச்சிலை மண்ணோடு குளப்பி பூசுவது, அரிப்பு செடி பட்டால் சிறுநீரை அந்த இடத்தில் அடிப்பது , தோல் கிழிசல்களுக்கு காபி, டீத் தூளை அப்புவது என்று பல மூடநம்பிக்கைகளை நமது சமூகம் இன்னும் கொண்டிருக்கிறது, அதை நாம் தொடர்வது தவறு.

தீமை செய்யும் பாக்டீரியாக்களும் இருக்கும்

நமது சந்ததிகளுக்கு நல்லதைக் கடத்தும் பொறுப்பும் கடமையும் நமக்கு உண்டு. உமிழ்நீரில் நல்லது செய்யும் பாக்டீரியாக்கள் இருப்பது எப்படி உண்மையோ அதே போல தீமை செய்யும் பாக்டீரியாக்களும், தொற்று உண்டாக்கும் வைரஸ்களும் கூடவே இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

ஸ்ட்ரெப்டோகோக்கை பாக்டீரியா மோனோநியூக்லியோசிஸ் உண்டாக்கும் வைரஸ் ஆகிய கொடும் கிருமிகள் உமிழ்நீரில் இருக்கலாம்.

உமிழ்நீருக்கு கிருமியை அழிக்கும் திறன் மிக அதிகமாக இருக்குமாயின் எப்படி பற்களில் பாக்டீரியாக்கள் கூடு கட்டி வாழ்த்து வேர் வரை சென்று பற்சிதைவு நோயை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்’’

இவ்வாறு பொது நல மருத்துவர் Dr ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.