மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கர்ணன், கலந்துகொண்டார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது; தங்கள் கட்சி இந்தியா கூட்டணியில் உறுதியாக இருப்பதாகவும், அதிமுக தங்கள் கட்சியின் பெயரையோ அல்லது கொடியையோ பயன்படுத்தக் கூடாது எனவும் மேலும், பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்துத் தனது கட்சியின் நிலைப்பாட்டையும் அவர் தெளிவுபடுத்தினார்.

Continues below advertisement

"அதிமுகவை வன்மையாகக் கண்டிக்கிறோம்"

எங்களுடைய அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணியில் தான் உள்ளது. அதேபோல், தமிழகத்திலும் இந்தியா கூட்டணியாகவும், அதற்குத் தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியிலும் தான் நாங்கள் உள்ளோம். ஆனால், சமீபகாலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தாங்கள் கூட்டணியில் இருப்பதாகப் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் கட்சியின் பெயரையோ, எங்கள் கொடியையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பயன்படுத்தக் கூடாது" என்று எச்சரிக்கை விடுத்த அவர், தொடர்ந்து இதுபோல் நடந்தால், தாங்கள் கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

Continues below advertisement

திருநெல்வேலி கொலை வழக்கு குறித்த விவாதம்

சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்த இளைஞர் கொலை வழக்கில், கொலை செய்த சுஜித்தின் தாய் மற்றும் தந்தையரைக் கைது செய்ய வலியுறுத்தி, ஜான் பாண்டியன்  பேசியது குறித்த கேள்விக்கு "இரண்டு அமைச்சர்கள் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஜான் பாண்டியன் அவ்வாறு பேசியுள்ளதாக அறிகிறேன். இது மிகவும் தவறானது. கொலை செய்தால் எவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பது காவல்துறையில் உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படி இருக்கும் சூழ்நிலையில், அவர்கள் கொலை செய்யத் தூண்டியிருக்க வாய்ப்பில்லை. சுஜித் மட்டுமே கொலை செய்ததாகக் காவல் நிலையத்தில் சரணடைந்த பிறகு, காவல்துறையில் பணிபுரியும் அவரது தாய், தந்தை மீது வழக்குப்பதிவு செய்தால், அவர்களை விடுவிக்கக் கோரி அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி மற்ற சமூக இயக்கங்களுடன் இணைந்து மாநில அளவில் போராட்டங்களை முன்னெடுக்கும்.

கள்ளர் பள்ளி, கல்லூரிகளின் பெயர்கள் மாற்றம் கூடாது

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட கள்ளர் பள்ளி, கல்லூரி, விடுதி உள்ளிட்ட அமைப்புகளின் பெயர்களை மாற்றக்கூடாது. "இது எங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த நிதியால் உருவாக்கப்பட்டதாகும். அதன் பெயரை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது. இதற்காக நாங்கள் முதலமைச்சரைச் சந்தித்து எங்கள் கோரிக்கையை முன்வைக்க உள்ளோம். கவுரவக் கொலைக்குத் தனிச் சட்டம் கோருவது அபத்தம்கவுரவக் கொலைக்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கோருவது குறித்துக் கர்ணன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

"இது ஒரு அபத்தமான செயல். ஏற்கனவே தூக்கு தண்டனை மற்றும் மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் இருக்கும்போது, இறந்தவரை மீண்டும் தூக்கிலிட முடியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். "ஏற்கனவே போதுமான சட்டங்களும், தண்டனைகளும் உள்ளது. எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பிட்ட சாதிக்காக நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால், வரும் தேர்தலில் தென் மாவட்டங்களில் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று அவர் சூளுரைத்தார். வரும் தேர்தலில் ஐந்து தொகுதிகள் கேட்போம் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம் என்றும், குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளைக் கேட்போம் "தற்போது நாங்கள் பத்து தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.