மாணாக்கர்களிடையே பாலின உளவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து அரசு கல்லூரிகளிலும் குழு அமைத்தல்
சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் "பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழுவை" (Formation of a Monitoring and Awareness Committee on Gender Psychology) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசியதாவது:-
''முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு இணங்க அரசுக் கல்லூரிகளில் 'பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு' அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுவை உயர் கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரால் திறக்கப்பட்ட இக்கல்லூரி 1969-லிருந்து ஆடவர் கல்லூரியாக செயல்பட்டு வந்தது. கடந்த கல்வியாண்டு முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது.
இக்கல்லூரியில் இதுவரை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4.80 கோடியில் ஆயிரம் இருக்கைகளுடன் கலைஞர் கலையரங்கம், ரூ.44.50 கோடியில் மிகச்சிறப்பான அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மாணவர் விடுதியான எம்.சி. ராஜா விடுதிக் கட்டிடம், மூன்று புதிய பாடத்திட்டங்களும் தொடங்கப்பட்டது. அனுமதி பெற்றுத் தரப்பட்டது. இந்த கல்வி ஆண்டில் ஷிப்ட் 2 படிப்புக்கு, B.A. (History), B.A. (Computer Science) அனுமதி பெற்றுத் தரப்பட்டது.
மாணாக்கர்கள் பாலின விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியதாவது:-
"நான் முதல்வன் திட்டம் வருடத்திற்கு ரூ. 10 இலட்சம் மாணாக்கர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 41 இலட்சம் மாணாக்கர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் நமது தமிழ்நாடு மாணாக்கர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதே இதற்கு சாட்சியாகும்.
மாணாக்கர்கள் கல்வி பயிலும் இடங்கள் உரிய புரிதலுடன் பாலின பாகுபாடின்றி செயல்பட ஏதுவாக "பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு" உயர்கல்வி நிறுவனங்களில் அமைத்திட அறிவிக்கப்பட்டது.
அனைத்து கல்லூரிகளிலும் பாலின உளவியல் குழு
அதன்படி, இன்று இக்கல்லூரியில் பாலின உளவியல் சூறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுவின் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் இக்குழு அமைக்கப்படும்.
உளவியலாளர்கள், சமூகவியல் அறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், பெண்ணுரிமை வல்லுநர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரின் வழிகாட்டுதலுடன் இக்குழுக்கள் மாணாக்கர்களுக்கு தேவையான புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களிடையே உறவை வலுப்படுத்தவும் இது உதவும். கட்டமைக்கப்பட்ட சமூதாயத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். எனவே, மாணாக்கர்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களது உயர்கல்வியினை மேற்கொள்ளவும் சமூதாயக் கட்டமைப்புக்கு ஏற்ப தங்களை உருவாக்கி கொண்டு இச்சமுதாயத்தில் வளமுற வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு உயர் கல்வித் துறை அமைச்சர் பேசினார்.