இந்த ஆண்டு ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? ஆம், நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. இந்தியா முழுவதும் சிக்கன் பிரியாணி தொடர்ந்து பலரின் இதயங்களை வென்று வருகிறது.
2021ஆம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்த ரிப்போர்ட்டை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்த ஆண்டு ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த டிஷ் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. சிக்கன் பிரியாணிக்கான ஆர்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணிகளும் ஒரு செகண்டிற்கு 2 பிரியாணிகளும் ஆர்டர் செய்யப்படுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் நிமிடத்திற்கு 90 பிரியாணிகள் மட்டுமே ஆர்டர் செய்யப்பட்டன. இப்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெஜிடபிள் பிரியாணியை பொருத்தவரை சிக்கன் பிரியாணியை விட 4.3 மடங்கு குறைவாக ஆர்டர் செய்யப்பட்டது. கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், லக்னோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிக்கன் பிரியாணியை மிகவும் விரும்பி ஆர்டர் செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளது.
ஸ்விகியின் அறிக்கையை ஆராய்ந்து பார்த்தால் மேலும் வியக்கத்தக்க தகவல்கள் கிடைத்தன. சிக்கன் பிரியாணி அதன் பழைய ரசிகர்களின் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல், புதிய ஆர்டர்களில் மிகவும் பிரபலமான தேர்வாகவும் இருந்தது. 4.25 லட்சம் புதிய பயனர்களால் ஆதரிக்கப்படும் மிகவும் பொதுவான முதல் உணவாக சிக்கன் பிரியாணி மாறியுள்ளது. இந்த ஆண்டில் 60 மில்லியன் சிக்கன் ஆர்டர்கள் ஸ்விகியில் செய்யப்பட்டுள்ளது. இதை ஸ்விகி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் மும்பையில் இந்த முடிவு சற்று மாறியுள்ளது. யூகித்து பாருங்கள் இங்கு என்ன டிஷ் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டிருக்கும் என்று... ஆம்... மும்பை மக்களின் பெரும்பாலான தேர்வு தால் கிச்சடி. இந்த உணவு சிக்கன் பிரியாணியை விட இரண்டு மடங்கு விற்பனையானது. ஜெய்ப்பூர் டால் ஃபிரையை மிகவும் விரும்பி ஆர்டர் செய்துள்ளனர். டெல்லி தால் மக்கானியை அதிகம் ஆர்டர் செய்துள்ளனர். பெங்களூர் மக்கள் அதிகம் மசாலா தோசையை விரும்பி ஆர்டர் செய்துள்ளனர். சென்னையைப் பொருத்தவரை, முன்னுரிமை பட்டியலில் சிக்கன் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் ஸ்விகி வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியர்கள் 2021ஆம் ஆண்டு ஆரோக்கியமான உணவை நோக்கி சாய்ந்துள்ளனர். ஸ்விகியில் ஆரோக்கியமான உணவுக்கான தேடல் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. திண்பண்டங்கள் பட்டியலில் சமோசா, பாவ்பஜ்ஜியை அதிகம் ஆர்டர் செய்துள்ளனர். சமோசாவை பொருத்தவரை இந்த ஆண்டு மட்டும் 5 மில்லியன் ஆர்டர்கள் வந்தன. அதிகம் விரும்பப்பட்ட சிற்றுண்டிகளில் பாவ் பாஜி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இனிப்பு வகைகளில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டது குலோப்ஜாமுன் மற்றும் ரசமலாய். குலோப் ஜாமுனை பொருத்தவரை 2.1 மில்லியன் ஆர்டர்கள் இந்த ஆண்டு வந்துள்ளன. ரசமலாய் 1.27 மில்லியன் ஆர்டர்கள் வந்தன. சென்னைவாசிகள் சிக்கன் பிரியாணி, சிக்கன் ப்ரைடு ரைஸ், மட்டன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, நெய் பொங்கல் ஆகியவற்றையே அதிகம் ஆர்டர் செய்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.