டீக்கடைக்கு சென்று டீ குடிப்பவர்கள் இனிப்பு போண்டாவை சாப்பிட மறப்பதில்லை. இனிப்பு போண்டாவின் சுவை ஏராளமானோருக்கு பிடித்திருப்பது தான் இதற்கு காரணம். டீக்கடையில் செய்யும் இனிப்பு போண்டாவை நாம் வீட்டிலேயே எளிதாக செய்து விட முடியும். வாங்க இனிப்பு போண்டா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்


மைதா மாவு - 300 கிராம், சர்க்கரை - 150 கிராம், ஆப்ப சோடா -அரை டீஸ்பூன், ஏலக்காய் - 5.


செய்முறை


இனிப்பு போண்டா செய்வதற்கு முதலில் முக்கால் கப் அளவிற்கு வெள்ளை சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து இதனுடன் 5 ஏலக்காய்களையும் சேர்க்க வேண்டும். சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். இதை ஒரு பெளலில் சேர்த்து, இவற்றுடன் சுமார் ஒன்றரை கப் அளவிற்கு மைதா மாவு சேர்க்க வேண்டும்.


300 கிராம் மைதா மாவு சேர்த்து பின்பு அரை டீஸ்பூன் அளவிற்கு சோடா உப்பு சேர்க்க வேண்டும். சமையல் சோடா எனப்படும் ஆப்ப சோடா சேர்க்க விருப்பவில்லை என்றால் அதற்கு பதிலாக புளித்த இட்லி மாவு அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீரை தெளித்து போண்டா மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். 


சரியான பதத்தில் மாவை பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிசைந்த மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அப்போது தான் அதில் கொஞ்சம் புளித்த தன்மை ஏற்படும்.  ஒரு மணி நேரம் கழிந்த பின், அடுப்பை பற்ற வைத்து, கடாயை வைத்து அதில் போண்டாவை வேகவைத்து எடுக்க தேவையான அளவிற்கு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். எண்ணெய் நன்கு சூடானாதும்,  அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிசைந்து வைத்துள்ள போண்டா மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் சேர்க்க வேண்டும். 


அரை நிமிட இடைவெளி விட்டு ஒவ்வொரு உருண்டைகளையும் எண்ணெயில் சேர்க்க வேண்டும்.  உடனே சேர்த்தால் போண்டா ஒன்றுடன் மற்றொன்று ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. போண்டா நல்ல பொன்னிறமாக மாறும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். பொன்னிறமாக மாறுவதற்கு முன் எடுத்தால் போண்டா சரியாக வேகாமல் இருக்க வாய்ப்புள்ளது. போண்டா வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுக்கும் போது எண்ணெயை நன்கு வடிகட்டி விட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான இனிப்பு போண்டா தயார். 


மேலும் படிக்க:


Asia Games 2023: ஆசிய போட்டி மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா...தங்கம் வெல்லுமா?