ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய வெற்றி பெற்றுள்ளது. 8.2 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்களை எடுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டாஸ் வென்று முதலில்  பேட்டிங் செய்த வங்கதேச அணி 17.5 ஓவரில் 51 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 


சுருண்ட வங்கதேச அணி:


ஜெய்ஜாங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், இந்திய அணியின்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீராங்கனைகளான ஷாதி ராணி மற்றும் ஷமிமா சுல்தானா ஆகியோர் ரன் எடுக்காமல், பூஜா வஸ்த்ரகர் பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த மற்ற வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் நடையை கட்டினார். அதிகபட்சமாக அந்த அணியில் கேப்டன் நிகர் சுல்தானா, 12 ரன்களை சேர்த்தார்.  ஒட்டுமொத்த அணியில் இரட்டை இலக்கை எட்டியது இவர் மட்டும் தான். இறுதியில் 17.5 ஓவர்களில் அந்த அணி வெறும் 51 ரன்களை மட்டும் சேர்த்து அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருக்கு உறுதுணையாக திதாஷ் சாது, அமன்ஜோத் கவுர், ராஜேஷ்வரி கயக்வாட் மற்றும் தேவிகா வைத்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.






இறுதிப்போட்டியில் இந்திய அணி:


எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி விராங்கனைகள், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ஸ்மிருதி மந்தனா 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, ஷபாலி வர்மா 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.  இருப்பினும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிலைத்து நின்று ஆடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 ரன்களை சேர்த்தார். இதன் மூலம், 8.2 ஓவர்களிலேயெ இந்திய அணி இலக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆசிய போட்டி கிரிக்கெட் விளையாட்டின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இதன் மூலம், இந்திய அணி பதக்கம் வெல்வது உறுதியாகியுள்ளது.


இறுதிப்போட்டி யாருடன்?


இதையடுத்து நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தும். இந்த போட்டி நாளை நடைபெற உள்ளது.