உதடுகளே வார்த்தைகள் அற்றுப்போய், பேசாமல் பேசும் உணர்வு மொழியே முத்தம். முத்தம் காமமா, காதலா என்று பட்டிமன்றம் வைத்து பல எபிஸோடுகள் ஓட்டலாம், அவ்வளவு இருக்கிறது பேச. மகள்களை பெற்ற அப்பாக்களுக்கென ஒரு இலக்கணம் எழுதுகிறார் இயக்குனர் ராம். அதுபோல முத்தங்கள் பலவிதம்தான். ஒவ்வொன்றும் ஒருவிதம். அம்மா குழந்தைக்கு, குழந்தை அம்மாவுக்கு, தாத்தா, பாட்டி, சகோதரர், சகோதரிகள், நண்பர்கள் என நீட்டிக்கொண்டு போனால் விஜய் சேதுபதியில் சென்று நிற்கும். இதில் ஒவ்வொரு முத்தத்தின் போதும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வெவ்வேறாக இருக்கும். ஆனால் காதலர்கள முத்தமிட்டுக் கொள்ளும்போது ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்கள் முற்றிலும் வேறு. 'என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது...


என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது; ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது...' என்ற வைரமுத்துவின் வரிகள் சொல்வதைப்போல, காதலை வெளிப்படுத்துவதில் முத்தத்துக்கு ஈடு வேறு எதுவுமில்லை. நீங்கள் உங்கள் துணையின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த வாங்கிக்கொடுக்கும் விலை மிகுந்த பரிசுப் பொருள்களைவிட, அவரை நெஞ்சமெல்லாம் நேசத்தோடு அணைத்துத் தரும் ஒரு முத்தம் உணர்த்திவிடும் உங்கள் எல்லையற்ற காதலை!


காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. ஆனால் காதலர்களில் கிட்டதட்ட 40 சதவீதம் பேர் மட்டும் தான் உதட்டில் முத்தமிட்டுக் கொள்கிறார்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா… காதலர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிப்பதிலும், அவர்களின் காதலை அடுத்தகட்டத்தை நோக்கி எடுத்துச் செல்வதிலும் முத்தத்தின் பங்கு முக்கியமானது. முத்தம் கொடுப்பதற்கு என்றே சில முறைகள் உள்ளன. மேலும், முத்தத்தில் பல வகைகளும் அவற்றுக்கு பிரத்யேக அர்த்தங்களும் உள்ளன.



ஒரு காதலன் தன் காதலிக்கோ, காதலி தன் காதலனுக்கோ கன்னம், கழுத்து, கைகள் என்று எங்கு வேண்டுமானாலும் முத்தம் தரலாம் என்றாலும் உதட்டில் தரப்படும் முத்தம்தான் காதலுக்கு மரியாதை. மற்ற முத்தங்களை விட உதட்டில் முத்தம் கொடுப்பது கொஞ்சம் வேறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது. காரணம் உதடுகளில் முத்தமிடும்போது உடலும் உதட்டு ஓரங்களில் இருக்கக் கூடிய நரம்புகளின் மூலமும் உடலுக்குச் சில பாசிடிவ் சமிக்ஞைகளை அனுப்புகிறது. அதனால் தான் அந்த முத்தத்தில் ஈர்ப்பும் அதிகமாக இருக்கிறது. லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது இயல்பாகவே ஆண் - பெண் இருவரும் கண்களை மூடிக் கொள்கிறார்கள். இதற்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் உண்டு. காதலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது. இருவருடைய சுவாசமும் இயல்பாகவும் சீரானதாகவும் இருக்காது, சுவாசம் வேகமடையும், அதைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தான் கண்களை மூடுகிறார்கள்.


முத்தமிடுவதில் மிக முக்கியமானது தொடுதல் உணர்வை பரஸ்பரம் இரண்டு பேரும் அடைகிறார்கள். அதில் இதழ் வழி முத்தத்தில் நெருக்கம் இன்னும் அதிகமாகும். தொடுதல் உணர்வு எதிர் பாலினத்தவரோடு இயல்பாகவே நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும். பொதுவாக உணர்வுகளின் குவிமையம் என்று சொல்லப்படுகிற பிறப்புறுக்களில் தான் அதிக அளவிலான நரம்பு செல்கள் ஓடுகின்றன என்று இதுவரை நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய உடலின் எல்லா பகுதிகளையும் விட உதட்டின் ஓரங்களில் தான் அதிக நரம்பணுக்கள் இருக்கின்றனவாம். கேட்கவே மிக ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? அதனால் தான் உதட்டுடன் உதடு சேர்த்து கொடுக்கப்படும் லிப்லாக்கில் அதிக ஈர்ப்பும் நெருக்கமும் உண்டாகிறது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது என்ன தெரியுமா? நம்முடைய உதடுகளுக்கென்று தனித்துவமான சுவை இருக்கிறதாம். 



அந்த சுவையின் தன்மையையும் வித்தியாசத்தையும் லிப்லாக் முத்தத்தில் ஆர்வம் இருக்கிற சிலர் மட்டும் தான் கண்டுபிடிக்கிறார்களாம். பொதுவாக உதடு என்றாலே சிவப்பு நிறத்தோடு தொடர்பு படுத்தப்படுகிறது. இதற்கும் முத்தத்துக்கும் காமத்துக்கும் கூட தொடர்பு இருக்கிறது. உலக அளவில் பல்வேறு மனித இனங்கள் தங்களுடைய காதல் மற்றும் வேட்கைக்கான சமிக்ஞையாக சிவப்பு நிறத்தைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால் தான் ஆரம்ப காலத்தில் பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக்குகளால் உதடுகளை அலங்கரித்துக் கொண்டனர். இப்போது நிறைய வண்ணங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் சிவப்பு இன்னும் ஹாட் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.


முத்தம் என்பது காதல் கலையும் தாண்டி அது ஒரு வாய் வந்த கலை. இதழோடு இதழ் சேர்த்து கொடுக்கும் முத்தத்தில் இருந்து காற்றில் பறக்க விடும் முத்தம் வரை கச்சிதமாக இல்லை என்றால் அது வேஸ்ட் தான். அதனால் எப்படி முத்தம் கொடுத்தால் சிறப்பு என்பதை பார்க்கலாம். முத்தம் தானே என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். காதலில் முத்தம் தான் எல்லாமே. அன்பு, நம்பிக்கை, நெகிழ்ச்சி இப்படி எல்லாவற்றுக்குமான அடிப்படையே முத்தம் தான்.


அதனால் அதை ஏதோ ஏனோதானேவென்று கொடுத்துவிட முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஆணிடம் இருந்து பல வித்தியாசத்தை எதிர்பார்க்கிறாள். தங்கள் காதலன் அவர்கள் மீது வைத்துள்ள வலுவான விருப்பத்தையும் ஆர்வத்தையும் உணர விரும்புகிறார்கள். எனவே உங்க வலுவான காதலை வெளிப்படுத்த நீங்க முத்த நுட்பத்தை பிடித்திருப்பது மிகவும் அவசியம்.


ஆண் - பெண் இருவரும் ஒருவருடைய உதட்டை மற்றவர் இதழ்களால் தொட்டு, லேசாக அழுத்தம் கொடுக்கும்போது, உதட்டு ஓரங்களில் உள்ள நரம்பணுக்கள் உணர்ச்சியைத் தூண்டுகின்றன. அதற்குப் பிறகு லிப்-லாக், பிரெஞ்ச் கிஸ் என்பதெல்லாம் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது, அது நீள்வதை சார்ந்தது, அதன் சூழலை சார்ந்தது!