சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதமாக, தனது காதலி நயன்தாராவின் இதுவரை வெளியிடப்படாத படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், அனைவரின் வாழ்க்கையையும் இனியதாக மாற்றும் பெண்களுக்காக குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.



இயக்குநர் விக்னேஷ் சிவன் தன் பதிவில், `நம் வாழ்க்கையில் இருக்கும் பெண்களே நம் வாழ்க்கையை உருவாக்குகிறார்கள்; அவர்களே நம்மை முழுமையாக மாற்றுகிறார்கள். பெண்களே நம் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறார்கள்; நாம் செய்யும் அனைத்தும் செயல்களாகவும் இருக்கிறார்கள். இன்று மட்டும் அல்ல; எல்லா தினங்களும் பெண்களின் தினங்களே! சொற்களை விட செயலே பெரியது. எனவே இங்குள்ள அனைத்து பெண்களுக்குமான அழகான இடமாக நமது இடங்களை மாற்றுவோம். தைரியமான, அழகான, வலிமையான, அற்புதமான பெண்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்!’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் நடிகை நயன்தாராவின் இதுவரை வெளியிடப்படாத வெவ்வேறு படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.



இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவைக் கொண்டாடுவது இது முதல் முறையல்ல. தொடர்ந்து தனது சமூக வலைத்தளப் பதிவுகளில் நயன்தாராவை மகிழ்விக்கும் படங்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.




சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் `காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில், நயன்தாரா தன்னுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமந்தா ரூத் பிரபு முதலானோருடன் இணைந்து நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.