இயக்குநர் நெல்சன் உருவாக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும் `பீஸ்ட்’ திரைப்படம், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதுடன் வரும் ஏப்ரல் 14 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தன் `பீஸ்ட்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் இறங்கியுள்ளார். தற்போதைய தகவல்களின் படி, தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இந்தப் புதிய திரைப்படமான `தளபதி 66’ வரும் ஏப்ரல் 2 அன்று தெலுங்கு மக்களின் பண்டிகையான உகாதி அன்று படப்பிடிப்பு தொடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.



இது ஒருபக்கம் இருக்க, `தளபதி 66’ திரைப்படம் தொடர்பான மிக முக்கியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்தத் திரைப்படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டு, இந்தப் படக்குழுவில் இணைந்துள்ளார். `தளபதி 66’ படத்திற்காக பூஜா ஹெக்டே, கியாரா அத்வானி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகைகள் பேசப்பட்டு வந்த நிலையில், தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த முக்கியமான வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் படி, `புஷ்பா’ படத்தின் மூலம் அகில இந்திய நாயகியாக உருவாகியுள்ள ராஷ்மிகா மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், `தளபதி 66’ படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


இந்தப் படத்தின் கதை பிரம்மாண்டமான மாளிகை ஒன்றில் நடக்கவுள்ளது. இதற்காக ஆந்திரப் பிரதேசத்தில் பிரம்மாண்ட மாளிகை செட் ஒன்று கட்டப்பட்டு வருவதோடு, படக்குழுவினர் அந்தக் கட்டிடத்தின் முழு வடிவம் மேலெழுந்து வருவதற்காகவும், படப்பிடிப்பைத் தொடங்குவதற்காகவும் காத்துக் கொண்டிருக்கின்றனர். வரும் ஏப்ரல் 2 முதல், `தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்குள் இந்தப் பிரம்மாண்ட மாளிகை செட் கட்டி முடிக்கப்படாமல் இருந்தால், அதற்காக மற்றொரு திட்டத்தையும் கைவசம் வைத்திருக்கிறது படக்குழு. அதன்படி, பங்களா முடிவுப் பெறாமல் இருந்தால், படக்குழுவினர் பாடல் காட்சி ஒன்றைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பாடலின் படப்பிடிப்பின் போது, `தளபதி 66’ படத்தின் கதாநாயகியான நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் தமன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.



இந்தியாவின் `தேசிய க்ரஷ்’ என்று இளைஞர்களாலும், ரசிகர்களாலும் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா பல்வேறு நேர்காணல்களின் தனக்கு பிடித்த நடிகர் விஜய் என்று பல முறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.