ராமாயணம்  இந்தியாவில் செவி வழி கதைகளாகவும் ,இதிகாச நூலாகவும் இந்திய மக்களிடையே அதிலும்  குறிப்பாக இந்துக்கள் இடையே இரண்டற கலந்து இருக்கிறது. அதிலும் இந்த ராமாயணக் கதை கம்ப ராமாயணம்,வால்மீகி ராமாயணம் என ஒவ்வொரு நூல் ஆசிரியர்களாலும் ஒவ்வொரு விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


இருப்பினும் பொதுவான கதை அம்சத்தின் படி தசரத சக்கரவர்த்தியின் மைந்தனான ராமன்,இலக்குமணன் மற்றும் ராமனின் மனைவி சீதை மூவரும் நாடு துறந்து வனவாசம் செய்கிறார்கள்.அத்தருணத்தில் ராவணன் சீதையை சிறை பிடித்து இலங்கையில் சிறை வைத்ததாகவும், இதனால் சீதையை மீட்கும் பொருட்டு படை திரட்டி சென்ற ராமன் , ராவணனை வென்று சீதையை மீட்டார் என்பது இந்த இதிகாசத்தின் கதையாகும்.


இந்த கதையில் வானர படையை திரட்டி ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு மிதக்கும் கற்களால் ஆன பாலம் அமைத்து,அப்பாலத்தின் வழியே இலங்கையை அடைந்து போர் புரிந்தார் என்பதும் அடங்கி இருக்கிறது. இதைப் போலவே ராமன் பொருட்டு ஹனுமன் சீதையிடம் இடம் தூது சென்றதும்,அங்கு சீதையை சந்தித்ததும் என இந்த கதையின் இரண்டாம் பிற்பகுதி முழுவதும் இலங்கையை சுற்றியே நிகழ்ந்திருக்கிறது.ஆகையால் இந்துக்களின் அதிலும் குறிப்பாக வைணவர்களின் நம்பிக்கையான ராமர்,சீதை மற்றும் ஆஞ்சநேயர் என இந்த மூவரும் இந்தியாவைப்போல இலங்கை முழுவதிலும் அறியப்பட்ட நம்பிக்கை பாத்திரங்களாகும்


அது மட்டுமன்றி இந்த கதை நடந்ததாக சொல்லப்பட்ட இடங்கள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து வரும் அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் இருந்து வரும் இந்து மக்கள் தரிசித்து விட்டு செல்கிறார்கள். ஆகையால் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இலங்கையானது புதிய சுற்றுலா திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.


 அதன்படி இலங்கையின் சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட்  வீரரான சனத் ஜெயசூர்யா இந்த ராமாயண வழி சுற்றுலா திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கை பொருளாதாரம் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் மூலம் மேம்படும் என்றும்,அதற்காக அரசு எல்லா வழிகளிலும் இத்திட்டத்திற்கு தேவையான விஷயங்களை செய்து கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.


இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து இத்திட்டம் தொடர்பாக விவாதித்திருக்கிறார் சனத் ஜெயசூரிய. இந்த சந்திப்பை தொடர்ந்து, இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள  செய்தியில், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதிலும்,சுற்றுலாவின் மூலம் இந்திய மற்றும் இலங்கை பொருளாதாரங்களை வலுப்படுத்துவது நோக்கமாகவும் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


ட்வீட்டிற்கு பதிலளித்த ஜெயசூர்யா,


"இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ராமாயண பாதையை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம், என்றும் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கு  மிக்க நன்றி” என்றும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். 


ஜெயசூர்யாவுக்கும் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பு இந்த வருடத்தில் இரண்டாவது முறையாகும். ஜெயசூர்யா ஏப்ரல் மாதம் பாக்லேயை சந்தித்து இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெறுவதற்கு இந்தியாவின் உதவியை நாடினார்.


மே மாதத்தில் இந்தியா 5,562 சுற்றுலா பயணிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா வரும் நாடுகளில் முதன்மையான  நாடாக இந்தியா இருந்துள்ளது.இதே போல 3,723 சுற்றுலா பயணிகள் வருகையோடு இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவும் இலங்கையும் 2008 இல் ராமாயண பாரம்பரியத்தின் அடிப்படையில் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் மத விழுமியங்களை மேம்படுத்துவதில் பணியாற்ற ஒப்புக்கொண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது


இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்றதன் பின்னர், தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கை அரசாங்கம் அது பெற்ற சர்வதேச கடன்களை கொடுக்க முடியாத நிலையில் திவால் ஆனதாக அறிவித்திருந்தது. இதனால் இந்தியா மனிதாபிமான அடிப்படையில், இலங்கைக்கு கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பொருளாதார உதவிகளை வழங்குவதில்  முன்னணியில் உள்ளது. இந்நிலையில் இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களாக கருதப்படும் நுவரெலியா,சீதாஎலிய எனப்படும் சீதை கோவில் மேலும் அங்குள்ள அனுமன் கோவில் என பல்வேறு இடங்கள் ராமாயண காலத்து  இடங்களாக கருதப்படுகின்றன.இலங்கையில் ராமாயணப் பாதையில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய 52 இடங்கள் உள்ளன.


 அதேபோன்று இராவணன் தங்கி இருந்தாக சொல்லப்படும் வனப்பகுதி, குகைகள் போன்றன அங்கு இருப்பதாக இலங்கை அரசால் கூறப்படுகிறது.