ஈரானிய நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவ்ரோஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள பார்சி சமூகத்தினரால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பாரசீக மொழியில், ‘நவ்’ என்றால் புதியது, ‘ரோஸ்’ என்றால் ‘நாள்’ அதாவது ‘புதிய நாள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பார்சி புத்தாண்டை கொண்டாடும் இந்த பாரம்பரியம் கடந்த 3,000 ஆண்டுகளாக ஈரானியர்கள் மற்றும் ஜோராஸ்டியன் ஆகியோரால் கடைப்பிடிக்கப்படுகிறது.


ஏன் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படுகிறது?


இந்த விழாவானது உலகளவில் எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ஆம் தேதி வசந்தகாலத்தில் வரும். ஆனால் இந்தியாவில் உள்ள பார்சி சமூக மக்கள் மட்டும் ஷாஹன்ஷாஹி நாட்காட்டியைப் பின்பற்றுகின்றனர். இதில் லீப் ஆண்டுகள் எதுவும் கணக்கிடப்படுவதில்லை. எனவே இந்த விழா, அதன் உண்மையான தேதியில் இருந்து சரியாக 200 நாட்களுக்கு பின் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்தியாவில் பார்சி புத்தாண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவ்ரோஸ் ஆகஸ்ட் 16 அதாவது இன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.



யார் இந்த பார்சிகள்?


உலகின் பழைமை வாய்ந்த சமயங்களில் ஒன்றான ஜோராஸ்ட்ரியனிசம், 3,500 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ஈரானில் இறைதூதர் ஜரதுசரால் உருவாக்கப்பட்டது. இது கிமு 650 முதல் 7 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றிய வரை தற்போது ஈரானாக இருக்கும் பெர்சியாவின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தது. மேலும் இது 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பண்டைய உலகில் மிக முக்கியமான சமயங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்: Watch Video: தும்பிக்கையை இப்படித்தான் யூஸ் பண்ணனும்.... லைக்ஸ் அள்ளும் யானைக்குட்டி..


பார்சி புத்தாண்டு வரலாறு


இஸ்லாமிய படைகள் பெர்சியா மீது படையெடுத்த போது, ஏராளமான ஜோராஸ்ட்ரியர்கள் இந்தியாவில் உள்ள குஜராத் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தப்பி வந்தனர். பார்சிகள் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய குழுவாக உருவாகினர். தற்போது உலகளவில் சுமார் 2.6 மில்லியன் ஜோராஸ்ட்ரியர்கள் உள்ளனர். பார்சி புத்தாண்டைக் கொண்டாட ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஜோராஸ்ட்ரியர்களால் ஃபாஸ்லி அல்லது பஸ்தாய் என்று அழைக்கப்படும் நாட்காட்டியை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஜோராஸ்ட்ரியர்கள் அல்ல என்ற போதிலும், இப்பகுதியில் உள்ள பல மக்கள் நவ்ரோஸை ஒரு பிரபலமான பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.



எப்படி கொண்டாடப்படுகிறது?


பார்சி புத்தாண்டின் போது பார்சிகள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, மலர்கள் மற்றும் கண்கவர் ரங்கோலிகளால் அலங்கரித்து, கொண்டாடுகிறார்கள். மேலும் இந்த சமூக மக்கள் காலை உணவுக்கு பின் பாரம்பரிய உடையை அணிந்து, தீ கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குகின்றனர். அங்கு ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை செழிப்புக்காக ஜஷான் என்ற பிராத்தனையை செய்கிறார்கள். மேலும் அந்த புனித நெருப்பிற்கு முன் பிரசாதமாக பால், தண்ணீர், பழங்கள், பூக்கள் மற்றம் சந்தனம் முதலியவற்றை வழங்குவார்கள். தங்கள் வீடுகளில் மதிய விருந்தின் போது, பிரான் பாட்டியோ, மோரி தார், பத்ரா நி மச்சி, ஹலீம், அக்கூரி, ஃபலூடா, அம்பகல்யா, தன்சாக், ராவோ, சாலி போடி, குங்குமப்பூ புலாவ் ஆகிய பாரம்பரிய பார்சி உணவுகளை செய்வார்கள். அந்த நாளில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை பன்னீர் தெளித்து வரவேற்பார்கள். சிலர் பார்சி புத்தாண்டன்று நன்கொடைகளையும் வழங்குவார்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.