சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமா உலகில் வந்து 45 ஆண்டுகளை கடந்த நிலையில் ‛ரஜினிசம்’ என்கிற பெயரில் அவரது கலை பயணத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக முன்னணி இயக்குனர்கள் பலர், அதற்காக ரஜினியின் புகைப்படங்களை பதிவிட்டு, தங்கள் ரசிக மனப்பான்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்சநட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த திரையுல வரலாற்றில், அவர் ஏற்ற கதாபாத்திரங்கள், அவர்கடந்து வந்த பாதை என, கடந்த வாரம் முதலே ரஜினிசம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரஜினி ரசிகர்களை சொல்ல வேண்டியதில்லை; சும்மாவே ஆடுவார்கள்... காலில் சலங்கை கட்டிவிட்டால் சொல்லவா வேண்டும்.
இப்படி ரஜினிக்கு எங்கு பார்த்தாலும் வாழ்த்து மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அதெல்லாம் ஒருபுறமிருக்க, ரஜினியின் வீட்டிலேயே அவருக்கு ரஜினியிச வாழ்த்து வந்திருக்கிறது. அவரது மகளும், நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா, சுதந்திரதின வாழ்த்துக்களுடன், தனது தந்தையின் 45 ஆண்டு கா சினிமா பயண வரலாற்றை உருக்கமாக பதிவு செய்துள்ளார். அதில்,
‛‛சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகிறது. தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் வலிமைக்கும் வணக்கம்..
47 வருட #ரஜினிசம் .. சுத்த கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ! அவருக்கு பிறந்ததில் பெருமை #பெருமைமிக்க மகள்,’’
என்று அந்த பதிவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, சுதந்திர தினத்திற்கு ரஜினிகாந்தை அலங்கரிக்கும் பணியையும் அவர் மேற்கொண்டுள்ளார். ரஜினிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ள நிலையில், பேரன்களுடன் மகிழ்வோடு பொழுதை கழித்து வருகிறார்.
திரையுலகில் இன்றும் கொடி கட்டி பறக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.