நம்முடைய அன்றாட உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, சி, அயர்ன், போலிக் ஆசிட் போன்றவை அதிகளவில் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு பெருமளவில் உதவுகிறது 


 அசைவ, சைவ உணவு என எது சமைத்தாலும் கறிவேப்பிலை இடம் பெறாமல் இருக்காது. இதற்கென்று தனித்துவமான மணமும், சுவையும் உள்ளதால் சமைக்கும் உணவிற்கு கூடுதல் சுவையினை வழங்குகிறது. நம் முன்னோர்கள் இதிலுள்ள மருத்துவக் குணங்களை தெரிந்து தான் சமையலில் முக்கியப்பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நம்மில் பலர் அதனைச் சாப்பிடும் தட்டில் ஓரளமாக வைக்கும் பழக்கத்தினை இன்னும் நிறுத்தியப்பாடில்லை. பல்வேறு மருத்துவ குணங்களைக் கறிவேப்பிலைக்கொண்டிருக்கும் நிலையில், இதில் ஆச்சரியப்படக்கூடிய பல்வேறு விஷயங்கள் புதைந்து உள்ளது . அதை அறிந்து கொள்வோம்.




மூக்கில் பிரச்சனை ஏற்படாது: நம்மில் பலருக்கு மூக்கில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும். கறிவேப்பிலையில் காம்ப்பெரெல் எனப்படும் கலவை உள்ளதால் கட்டியான சளியினை தளர்த்த உதவுவதோடு எந்த அலர்ஜியும் நாசியில் ஏற்படாமல் தடுக்கும் தன்மைக்கொண்டுள்ளது.


சர்க்கரை அளவினை சீராக்கும் : கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்திற்குப் பயனுள்ளதாக உள்ளது. மேலும் திடீரென உடலில் அதிகப்படியாக ஏறும் சர்க்கரை அளவினைக்கட்டுப்படுத்த உதவுகிறது. இன்சுலின் செயல்பாட்டினையும் அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


சோம்பலை நீக்கும் திறன்: கறிவேப்பிலையில் தென்படும் என்சைம்களால் செரிமான சக்தி அதிகரிக்கிறது. இதனால் திடீரென காலை எழுந்தவுடன் வாந்திப்போன்றவை ஏற்படுவதில்லை. குறிப்பாக கர்ப்பக்காலங்களில் கறிவேப்பிலையினை அதிகமாக உட்கொள்ளும் பொழுது எந்தவிதமான நோய்களும் தாய்மார்களுக்கு ஏற்படுவதில்லை மற்றும் உடல் சோம்பலைத்தடுக்கும் திறன் கொண்டுள்ளது.


இரத்தச்சோகைக்கு தீர்வு : இரும்பு மற்றும் போலீக் ஆசிட்கள் அதிகளவில் கறிவேப்பிலையில் உள்ளதால் உடலில் உள்ள இரத்தச்சோகைக்கு தீர்வாகவும், இனிமேல் ஏற்படாமல் வகையிலும் தடுக்கிறது.


கண்பார்வை அதிகரிப்பு:  கண்பார்வை சரியாக தெரியாமல் போவது அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை. காய்கறிகள்,கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும் எனவெல்லாம் கூறுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில்  வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் கண் ஆரோக்கியத்தோடு இருப்பதோடு கண்பார்வை குறைபாட்டினையும் சரிசெய்ய உதவுகிறது.


மன அழுத்தத்தினைக்குறைக்கும் திறன்: அலுவலகத்தில் வேலைக்கு சென்றாலும், வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கு மன அழுத்தம் என்பது ஏற்படாமல் இருக்காது. குறிப்பாக மன அழுத்தம் என்பது மிகப்பெரிய நோயாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் கறிவேற்பிலை மன அழுத்தத்தினைக்கட்டுப்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கறிவேப்பிலையில் தென்படும் நறுமணம் ஒருவருக்கு உடல் மற்றும் மனதில் ஏற்படும் மன அழுத்தத்தினை குறைக்க உதவுவதாக உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.





இதோடு பாக்டீரியாவை எதிர்க்கும் திறன் கறிவேப்பிலை இலைக்கு உள்ளதால் உடலில் திடீரென ஏற்படும் வயிற்றுப்பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.  மேலும் கறிவேப்பிலை இலையில் அதிகப்படியாக பல்வேறு நியுட்ரிசன்கள் உள்ளதால் முடி உதிர்வு, முடி உடைதல், போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.