திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜூலை 22-ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஸன்ஸ் கே 9 ஸ்டூடியோஸ் படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல இரட்டை சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ் படத்தின் அதிரடி காட்சிகளை இயக்கியுள்ளனர். முன்னதாக ஆர்யா நடிப்பில் உருவான டெடி படமும் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியிட்டிருந்தால் நல்ல வசூலை குவித்திருக்கும் என பலராலும் பேசப்பட்ட நிலையில், ஆர்யாவின் அடுத்த படமும் ஒடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
குத்துச்சண்டை வீரர் போல இருக்க வேண்டும் என்பதற்காக, கட்டு மஸ்தான தோற்றத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் ஆர்யா. ஆர்யாவுடன் நடித்தவர்களும் இந்தப் படத்தின் கதைக்களம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என கடுமையாக மெனக்கெட்டுள்ளனர். அவ்வபோது வெளியிடப்படும் சார்பாட்டா பரம்பரை புரமோஷன் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூடுதலாக்கின.
இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் இன்னும் மூடி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கும், தளர்வுகளும் மாறி மாறி அறிவிக்கப்படுவதால், தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கும் நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஷூட்டிங் பணிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றது. இயக்குனர் பாரதிராஜா போன்றவர்கள் திரையரங்குகளையும் கட்டுப்பாடுகளுடன் தொடங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்து வருவதால் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சில படங்களின் தியேட்டர் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.