வாழ்க்கையை பரபரப்பாக எதிர்நோக்கும் பழக்கம் மனிதர்களிடயே அதிகரித்திருக்கிறது எனலாம். வாழ்க்கை முறை, உணவு பழக்கம் ஆகியவற்றின் மாற்றங்களால் தூங்கும் நேரமும் மாறியிருக்கிறது. தூக்கமின்மை பிரச்சனை குறித்து உலகம் முழுவதும் விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுப்புகள் இருந்தாலும் சீரான தூக்கத்தை பெறுவது என்பது அனைவருக்கும் சவாலானதாக இருக்கிறது.


தூக்கமின்மை:


போதுமான அளவு தூங்காமல் இருப்பதால் உடல்நலன் மற்றும் மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கிறது மருத்துவ உலகம். தூக்கமின்மை பிரச்சனை உடல் மற்றும் மன ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாடு, வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சீராக இயங்குவது மற்றும் இதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு போதுமான அளவு தூங்குவது அவசியமாகிறது. தூங்கும் நேரத்தில்தான் உடல் ஓய்வு எடுக்கும், அப்போது புதிய செல்கள் உருவாகவும், உள்ளுருப்புகள் தங்களை புதுப்பித்துகொள்ளவும் உதவியாக இருக்கும். மோசமான தூக்கம் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நீண்டகால உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும். 


சீரான மூளை செயல்பாடு, உணர்ச்சிகளை கையாள்வது உள்ளிட்டவற்றிற்கு தூக்கம் மிகவும் அவசியம். 8 மணி நேரம் தூங்காமல் இருந்தால், வேலை செய்வது, சிந்திப்பது, உணர்ச்சிகளை கையாள்வது, வெளிப்படுத்துவது உள்ளிட்டவை சிக்கலாக இருக்கும்.  நாள்பட்ட தூக்கமின்மை மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலைக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.  பரபரப்பான சூழ்நிலையில் போதுமான அளவு தூங்குகிறீர்களா? என்பதற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது பற்றி காணலாம். 


சோர்வு மற்றும் பணி நேரத்தில் தூக்க உணர்வு


இரவு நேரத்தில் தூங்கி எழுந்தாலும் பகலில் சோர்வாகவும் தூக்கம் வருவதுபோல இருப்பது போன்ற உணர்வு தூக்கமின்மையின் பொதுவான அறிகுறியாகும். இதனால் காலை நேரத்தில் செய்யும் எந்த வேலையிலும் கவனமுடன் செய்ய முடியாது. குறைந்தது 8 மணி நேரம் நன்றாக தூங்கினால் காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.


கவனம் சிதறல்


நீண்டகால தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் அது அறிவாற்றலையும் பாதிக்கும். சில விசயங்களை நினைவு கூர்வதில் சிக்கல் ஏற்படலாம். கவனம் செலுத்துவது மற்றும் நினைவில் வைத்திருப்பது சவாலானதாக இருக்கும். இதுவும் தூக்கமின்மை பிரச்சனையின் ஒரு அறிகுறி. உற்பத்தி திறனை தூக்கமின்மை பிரச்சனையில் பாதிக்கலாம்.


 மனநிலை மாற்றம்


தூக்கமின்மை மனநிலையை கணிசமாக பாதிக்கும். எரிச்சல் உணர்வு, மனநிலை மாற்றங்கள், மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. சோகம் அல்லது பதற்ற உணர்வு ஏற்படும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் நிலை ஏற்படும். 


வாகனம் ஓட்டுவதில் சிக்கல்:


சரியாக தூக்கம் இல்லையென்றால், கார், டூவிலர் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவது சிரமமாக இருக்கும். இதனால் விபத்துகள்  ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். 


பசியின்மை மற்றும் எடை அதிகரிப்பு


தூக்கமின்மை ஹார்மோன் சீர்நிலையை பாதிக்கும். இதனால் பசியின்மை ஏற்படும். வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது. அதிக கலோரி கொண்ட உணவுகள், அதிகப்படியான உணவு சாப்பிடும் சூழல் ஏற்படலாம். காலப்போக்கில் எடை அதிகரிப்பு ஏற்படும். வளர்சிதை மாற்றம் அதாவது மெட்பாலிசம் சீராக இல்லையென்பதும் தூக்கமின்மை பிரச்சனையில் அறிகுறி.


 நோய் எதிர்ப்பு செயல்பாடு


நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாள்பட்ட தூக்கமின்மை நோய் எதிர்ப்பு செயல்பாட்டை பலவீனப்படுத்தலாம். நோய் தொற்றும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


உணர்ச்சிகளை கையாள்வதில் சிரமம்


தூக்கமின்மை உணர்ச்சி ஒழுங்குமுறையை பாதிக்கலாம். இது உணர்ச்சிவசப்பட்டு ரியாக்ட் செய்ய வழிவகுக்கும். மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படும். அன்றாடச் சவால்களைச் சமாளிப்பது சிக்கல் நிறைந்ததாக மாறும். 


தலைவலி


தூக்கமின்மை சில நபர்களுக்கு டென்ஷன் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். தொடர்ந்து சரியாக தூங்காமல் இருந்தால் அது தலைவலி பிரச்சனையில் உருவாக்கும். நாள்பட்ட தலைவலி இருப்பின் மருத்துவரை அணுக வேண்டும். தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் மற்றும் மனச்சோர்வு போன்ற உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு அபாயம் உள்ளது. நீண்ட நாட்களாக தூக்கமின்மை இருந்தால் அது உடல்நலனை கடுமையாக பாதிக்கும்.


சரும ஆரோக்கிய பாதிப்பு:


தூக்கமின்மை தோல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.  தோலில் கருமையான வட்டங்கள், வீக்கம் மற்றும் பொலிவு குறைவு உள்ளிட்டவைகளுக்கு காரணம் சரியாக தூங்காமல் இருப்பதே. சரும வறட்சி உள்ளிட்டவைகளுக்கும் ஏற்படலாம். 


சீரான உணவு, உடற்பயிற்சி போதுமான அளவு தூக்கம் ஆகியவை உடல்,மன ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும்.