ஐபிஎல் 2024 சீசன் 17 வருகின்ற 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், எதிர்பார்ப்பு உச்சத்தை தொடுகிறது. 


ஐஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா உட்பட பல வீரர்கள் காயம் காரணமாக ஐபிஎல் 2023ல் விளையாடவில்லை. அதேபோல், ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பாக, பல்வேறு வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகினர். இதில்,, பல வீரர்கள் ஏலத்தில் பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால், முழுப் ஐபிஎல் 2024 போட்டியிலிருந்தும் வெளியேறினர். வெளியேறினாலும் இந்த வீரர்களுக்கு ஏலம் எடுத்த முழு தொகையும் வழங்கப்படுமா என்ற கேள்வி எழும். இதையடுத்து, ஐபிஎல் 2024ல் காயம் மற்றும் தனிப்பட்ட காரணத்திற்காக வெளியேறிய வீரர்களுக்கு பணம் வழங்கப்படுமா..? இல்லையா..? என்பதை இங்கே பார்க்கலாம். 


ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறினாலும்  முழுப் பணம் கிடைக்குமா?


ஐபிஎல் விதிகளின்படி, சீசன் தொடங்கும் முன் காயம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக ஒரு வீரர் தனது பெயரை திரும்பப் பெற்றால், அவருக்கு எந்தத் தொகையும் வழங்கப்படாது. அதாவது எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் ஒரு வீரர் போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு பணம் கிடைக்காது. அதே நேரத்தில், போட்டியின் போது வீரர் காயம் அடைந்தாலோ அல்லது தனிப்பட்ட காரணத்தால் விளையாட முடியாமல் போனாலோ, போட்டிகளின் விகிதத்திற்கு ஏற்ப அவருக்கு பணம் வழங்கப்படும்.


இதுவரை எத்தனை வீரர்கள் ஐபிஎல் 2024ல் இருந்து வெளியேறியுள்ளனர்..? 


உலகின் பல முன்னணி வீரர்கள் ஐபிஎல் 2024ல் விளையாட முடியாமல் போன சோகம் ஏற்பட்டுள்ளது.  கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்ற முகமது ஷமியும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து லுங்கி என்கிடி, கஸ் அட்கின்சன், ஜேசன் ராய், பிரசித் கிருஷ்ணா, மதீஷ் பதிரனா, மார்க் வுட், ராபின் மின்சே மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோரும் காயம் மற்றும் பிற காரணங்களால் ஐபிஎல் 2024ல் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளனர். அதாவது, வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் இந்த வீரர்கள் யாருக்கும் எந்தத் தொகையும் வழங்கப்படாது.


ஐபிஎல் போட்டிக்கு மீண்டும் வந்த ரிஷப், ஸ்டார்க்: 


கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் வங்கதேச டெஸ்ட் தொடரை முடித்துகொண்டு வீட்டுக்கு செல்லும் வழியில் ரிஷப் பண்ட் கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இதனால் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேசிய கிரிக்கெட் அகாடமி ஐபிஎல் 2024ல் ரிஷப் பண்ட் விளையாட முழு தகுதி பெற்றுள்ளார் என அறிவித்தது. எனவே, இந்த சீசனில் ரசிகர்களின் பார்வை ரிஷப் பண்ட் மீதுதான் இருக்கும்.


சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடி ரூபாய்க்கு மிட்செல் ஸ்டார்க்கை ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக மிட்செல் ஸ்டார்க் ஆனார். ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவரால் போட்டியில் தடம் பதிக்க முடியுமா?  கடைசியாக ஐபிஎல் 2015 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார் மிட்செல் ஸ்டார்க். அதன் பிறகு மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதையடுத்து, தற்போது மிட்செல் ஸ்டார்க் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் லீக்கிற்கு திரும்பியுள்ளார்.