நாம் வாழும் வாழ்க்கைக்கு உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவு முறைகளும் அவசியமானதாக ஆகிவிட்டது. பெருகி வரும் நோய்களில் இருந்து உடலை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றால் அதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். அவரச உலகில் ஓடிக்கொண்டே இருக்கும் நாம் உடலை பற்றி பெரிதாக கவலை கொள்வதில்லை. 


காலையில் எழுந்திருப்பதற்கே பலருக்கு கடினமாக இருக்கும்போது நடைப்பயயிற்சி செய்வதெல்லாம் முடியாதது என பலர் நினைக்கலாம். காலையில் எழுந்ததும் அவசரமாக அலுவலகத்துக்கு அல்லது ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல பலருக்கு நேரம் இருக்கும். நடைப்பயிற்சி செல்வதை நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால், காலையில் நடைப்பயிற்சி செய்வதால் அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், மனதுக்கு இதமாகவும் இருக்கும் என்கிறார்கள் உடற்பயிற்சியாளர்களும், மருத்துவர்களும். 


ஜிம்முக்கு சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்துதான் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாரும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியை செய்து விட சூழ்நிலைகளும் இருக்க முடியாது. அதனால், எளிமையாக வீட்டில் இருந்தபடி தினமும் 30 நிமிடங்கள் செலவிட்டால், உடல் நலத்துடன் வாழலாம். பெரும்பலானோருக்கு உடற்பயிற்சி செய்ய விருப்பம் இருந்தாலும் அதற்காக நேரம் ஒதுக்க முடியாமலும், பணிச்சுமையாலும் அது முடியாமல் போகலாம். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்ததாக இருக்கும்.


அந்த காலத்தில் நம் முன்னோர்கள் அதிகமாக வாகனத்தை பயன்படுத்தியது கிடையாது. அவர்கள் நடப்பதை பழக்கமாக்கி கொண்டனர். அதனால் தான் அவர்களால் 70 வயதை கடந்தபோதும் ஆரோக்கியமாக வாழ முடிந்தது. தற்போது எதற்கு எடுத்தாலும் கிடைக்கும் வாகன வசதியால் 100 மீட்டர் தூரம் நடப்பதே பெரிய செயலாகி விட்டது. ஆனால், நடந்தால்தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை மறந்து விட கூடாது. 


அதிகாலை அல்லது சூரியன் உதயமாகும்போது எழுந்திருப்பது உடலுக்கு நல்லது. அந்த நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பல. வீட்டிற்குள்ளேயே நடப்பது நடைபயிற்சி ஆகாது. தெருவிலோ அல்லது பூங்கா அல்லது கடற்கரை சாலைகளிலோ குறைந்தபடம் 30 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும். தினம் இதை கடைப்பிடித்து வருவதால் வரும் நன்மைகள் பல உண்டு. 


உடல் எடை குறைவு


காலையில் நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடையை குறைக்க முடியும். தினமும் காலையில் 30 நிமிடங்கள் வரை நடைபயிற்சி செய்தால் 150 கலோரிகளை குறைக்கலாம். காலையில் உணவு எடுத்து கொள்ளாமல் நடைபயிற்சி செய்வதால், ஆற்றலுக்காக உடலில் உள்ள தேவையற்ற கரைந்து உடல் எடையை குறைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் முதல் தேர்வாக நடைப்பயிற்சியை செய்ய வேண்டும். அதுவும் காலையில் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியை தவிர்க்கக்கூடாது. 


நினைவாற்றல் அதிகரிக்கும்


காலை நடைப்பயிற்சி நினைவாற்றலை அதிகரிக்க உதவும். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் காலையில் செய்யும் நடைப்பயிற்சியால் மூளையில் நினைவாற்றலை தக்கவைத்து கொள்ளும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதி விரிவடையும். இதனால் நினைவாற்றல் அதிகரிக்கக்கூடும். பொதுவாக 55 வயதில் இருந்து 60 வயது அடைந்தால் இந்த ஹிப்போகேம்பஸ் பகுதி சுருங்க தொடங்கும். நடைப்பயிற்சியை கடைப்பிடித்து வந்தால் இந்த பகுதி விரிவடைந்து நினைவாற்றல் குறையாது. 


நேர்மறை எண்ணங்கள்..


நடைப்பயிற்சியை கடைப்பிடித்து வந்தால் மனதில் நேர்மறை எண்ணங்கள் உருவாகும். மனதும், உடலும் ஆரோக்கியமாக இருப்பதை உணர்வதால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கை தோன்றும். 


நோய் பாதிப்பை தடுக்கலாம்


காலையில் நடைபயிற்சி செய்தால் திடீரென வரும் நோய் பாதிப்புகளை தடுக்க முடியும். சர்க்கரை நோய், குறைந்த ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்களையும், புற்றுநோய் பாதிப்பும் வராமல் தடுக்க முடியும். காலையில் உடல் நடைப்பயிற்சியில் இருப்பதால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருப்பதால், இதயம் தொடர்பான பிரச்சனையை 19 சதவீதம் குறைக்கலாம். 


தசைகள் பலமாகும்


நடைப்பயிற்சியால் காலில் உள்ள தசைகள் பலப்படும். நடைப்பயிற்சியில் கால் முதல் உடலின் அனைத்து பகுதி தசைகளும் வேலை செய்வதால் உடலுக்கு சீரான ஆற்றலை பெற முடியும். 


நல்ல தூக்கத்தை பெறலாம்


தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்பவர்கள் இரவில் நன்றாக தூங்க முடியும். தேசிய உடலியல் நிறுவனம் நடத்திய ஆய்வில் காலையில் நடைப்பயிற்சி செல்பவர்கள் இரவில் நன்றாக தூங்குவதை கண்டறிந்தனர். தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் காலை நேர உடற்பயிற்சி பலனளிக்கும்.