டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களான ஆண்டர்சன் மற்றும் ஸ்ட்டுவர்ட் பிராட் கூட்டணி செய்துள்ள சாதனைகளை இந்த தொகுப்பில் அறியலாம். 


ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு:


இங்கிலாந்து அணிக்காக கடந்த 17 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த ஸ்டூவர்ட் பிராட், ஓவலில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஆஷஷ் தொடரின் கடைசி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம், கடந்த 15 ஆண்டுகளாக எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் ஆண்டர்சன் - பிராட் கூட்டணி முடிவை சந்திக்க உள்ளது. இந்த இரண்டு ஜாம்பவான்களும் சேர்ந்து பந்து வீசும் வாய்ப்பை பார்க்க உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன.


ஆண்டர்சன் - பிராட் கூட்டணி:


கடந்த 15 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் ஆண்டர்சன் - பிராட் கூட்டணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி தொடர்ந்து கோலோச்சுவதற்கு முக்கிய காரணமாகவும் இந்த கூட்டணியை குறிப்பிடலாம். இந்த இருவரும் கூட்டாக மட்டுமின்றி, தனிநபர்களாகவும் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதனை விளக்கும் விதமாக தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது ஜோடி எனும் சாதனையை கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்த்தியது.  நியூசிலாந்து உடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.   முன்னதாக இந்த சாதனையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்ராத் மற்றும் ஷேன் வார்னே கூட்டணி நிகழ்த்தி இருந்தது. 


சாதனைப்பட்டியல்:


கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆண்டர்சன் - பிராட் ஆகியோர் 138 போட்டிகளில் சேர்ந்து விளையாடி 537 விக்கெட்டுகளை குவித்துள்ளனர். 46 முறை 5-விக்கெட்ஸையும், 6 முறை 10-விக்கெட்ஸையும் வீழ்த்தியதை காண்பதன் மூலம், எதிரணிக்கு எத்தகைய நெருக்கடியை இந்த கூட்டணி கொடுத்து இருக்கும் என்பதை உணர முடிகிறது.


டெஸ்ட் போட்டிகளில் பிராட்:


167 டெஸ்ட் போட்ட்களில் விளையாடியுள்ள பிராட் 602 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதோடு, 20 முறை 5-விக்கெட்ஸ், 3 முறை 10-விக்கெட்ஸை வீழ்த்தியுள்ளார். அதோடு, 13 அரைசதங்கள், ஒரு சதம் என 3656 ரன்களையும் சேர்த்துள்ளார்.


பிராடின் டாப்- 5 சம்பவங்கள்:



  • 2016ம் ஆண்டு உலக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான ஜோஹன்ஸ்பெர்க் டெஸ்ட் போட்டியில், வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இங்கிலாந்து அணி தொடரை 1-1 என சமன் செய்ய முக்கிய பங்கு வகித்தார்.

  • டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்ஸ் எடுத்த 4 வீரர்களில்  ஸ்ட்டுவர்ட் பிராடும் ஒருவர். இதில் ஒன்று 2011ம் ஆண்டு நாட்டிங்காமில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

  • 2010ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 102 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது. அப்போது, பிராட் 169 ரன்களை குவித்து தனது அணியை சரிவில் இருந்து மீட்டார்.

  • டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது பந்து வீச்சாளர் மற்றும் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் எனும் சாதனையை அண்மையில் நிகழ்த்தினார்.

  • பிராட் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளில், 2015ம் ஆண்டு ஆஷஷ் தொடரில் நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில்,  வெறும் 15 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரை இங்கிலாந்து வெல்ல உறுதுணையாக இருந்தது தான் முதன்மையானதாக இருக்கிறது.