சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் சத்தியவாணி முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐசா ( 36 ) . இவர் நேற்று காலை எம்.கே.பி நகர் மேம்பாலம் வழியாக தனது நண்பர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர் ஐசாவை மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்து சென்றார். மேலும் குடிபோதையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் கத்தியைக் காட்டி மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் எம்.கே.பி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த எம்.கே.பி நகர் போலீசார் கத்தியை காட்டி மிரட்டிய நபரை கைது செய்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் வியாசர்பாடி பி.கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த விக்ரம் வயது (36) என்பதும் இவர் மீது வியாசர்பாடி , எம்.கே.பி.நகர் கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விக்ரமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வீட்டிலேயே மாவா தயாரித்து வடசென்னையில் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது
சென்னை வியாசர்பாடி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா பொருட்களை சிலர் வீட்டிலேயே தயார் செய்து அதை விற்பனை செய்து வருவதாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எம்.கே.பி நகர் போலீசார் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49 பிளாக் பகுதியில் ஒரு வீட்டில் திடீரென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா எனும் போதைப் பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜர்தா என்னும் போதை பொருள் 18 கிலோ மற்றும் 2 கிலோ மாவா ஆகிய பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் அந்த வீட்டில் இருந்த இந்திராணி (45) மற்றும் விமல் ராஜ் (39) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் வீட்டிலேயே மாவா தயார் செய்து வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.