பாலிவுட்டின் தாண்டி உலக அரங்கில் ரசிகர்களை ஈர்த்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் ’கிங் கான்’ எனப் போற்றப்படும் நடிகர் ஷாருக்கான். ’மை நேம் இஸ் கான்’ படத்தில் சராசரி வாழ்வில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசியது தொடங்கி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் புனிதப் பயணங்கள் மேற்கொள்வது வரை ஷாருக்கான் ஒரு இஸ்லாமியராக தனது கடமைகளை செய்து வருகிறார் ஷாருக்கான்.


வைரலான ஷாருக்கானின் உம்ரா உடை






அந்த வகையில் சமீபத்தில இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவுக்கு ஷாருக்கான் உம்ரா மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சவுதி அரேபியாவுல் ’டன்கி’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஷாருக்கான், தன் படப்பிடிப்பு ஷெட்யூல் முடிந்து அப்படியே மக்காவுக்கு பயணித்துள்ளார்.


இந்நிலையில், மக்காவில் வெள்ளை உடை தரித்து உம்ரா மேற்கொண்ட ஷாருக்கானின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், இஸ்லாமியர்களின் புனிதப் பயணமான உம்ரா என்றால் என்ன, அது ஹஜ் பயணத்தில் இருந்து  எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.


உம்ரா - ஹஜ் வித்தியாசம்


உம்ரா என்பது ஹஜ்ஜின் குறுகிய வடிவாகும். ஹஜ் என்பது இஸ்லாமியர்களின் புனித நகரங்களாகக் கருதப்படும் சவுதி அரேபியாவில் அமைந்துள்ள மக்கா, மதினாவுக்கான வருடாந்திர புனித யாத்திரைகளை உள்ளடக்கியது. இஸ்லாமிய மாதமான ஹஜ் மாதத்தில் தான் பொதுவாக ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் அப்படி இல்லாமல் உம்ரா பயணத்தை ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். 


இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின்படி ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஹஜ் தொழுகை நிறைவேற்றப்பட்டாலும், உம்ராவுக்கு அத்தகைய வரம்புகள் எதுவும் இல்லை. ஏராளமான முஸ்லிம்கள் புனித ரமலான் மாதத்தில் அல்லது ரஜப் மற்றும் ஷபான் எனப்படும் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் இரண்டு புனித மாதங்களில் உம்ரா மேற்கொள்ள முடிவு செய்கிறார்கள்.


இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஹஜ் ஒன்றாகவும் வாழ்நாளில் ஒருமுறையாவது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கருதப்பட்டாலும், உம்ராவோ, ஹஜ்ஜோ அது தனிப்பட்ட நபர்களின் விருப்பம், சூழல், நிதிநிலை சார்ந்தது.


இந்தப் புனித மாதங்களில் செய்யும் பிரார்த்தனை அதிக வெகுமதிகளை இறைவனிடம் பெற வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக உம்ரா செய்வதற்கு யாத்ரீகர்கள் ஒரு மாதத்துக்கு செல்லுபடியாகும் சிறப்பு விசாவுக்கு விண்ணப்பித்து பயணிக்கின்றனர்.


ஆடைக் கட்டுப்பாடு


ஆண்கள் தையல் இல்லாத வெள்ளைத் துணியின் இரண்டு தாள்களால் ஆன ’இஹ்ராம்’ எனும் ஆடையை அணிவார்கள். இது உடலின் கீழ் பாதியை மூடி, இடுப்பில் கட்டப்பட்டிருக்கும். மற்றொன்று உடல் மற்றும் தோள்களின் மேல் பாதியைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும். பெண்களுக்கு இத்தகைய ஆடைக் கட்டுப்பாடுகள் இல்லை.


கூடுதல் ஆடைகள் அணியத் தேவையில்லை. பாலினம், அந்தஸ்து, நாடுகள் கடந்து வேறுபாடுகளைக் களைந்து சமத்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில் இந்த ஆடை அணியப்படுகிறது.