நடிகர்கள் தொழிலில் முதலீடு செய்து தொழில் முனைவோராக அவதாரம் எடுக்கும் காலம் இது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாகி என்கிற உடை தயாரிப்பு ஃபேஷன் நிறுவனத்தில் முதலீடு செய்து தொழில்துறையில் காலடி எடுத்து வைத்தார் நடிகர் சமந்தா. அது அவருடைய சொந்த ஃபேஷன் லேபிள். சமந்தாவின் ஃபேஷன் தேர்வுகள் எப்போதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் உள்ள அவரது ஆர்வத்தின் அடுத்த கட்டமாக  பேமிலி மேன் 2 நடிகையும் முன்னாள் மிஸ் இந்தியா 2016 முதல் ரன்னர் அப்பாக வந்த சுஸ்ருதி கிருஷ்ணாவுடன் இதில் பார்ட்னர்ஷிப்பில் களமிறங்கினார் சமந்தா. சாகியின் இரண்டாம் ஆண்டில் அதுகுறித்து அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இருந்து...


”சாகியின் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன, அதன்  பயணம் இதைவிடச் சிறப்பாக இருந்திருக்க முடியாது. தொற்றுநோயின் போது நாங்கள் நிறைய தயக்கத்துடன்தான் இதனைத் தொடங்கினோம். அந்த நேரத்தில் நிலவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாங்கள் நம்பிக்கை என்பதை மட்டுமே முதல் முதலீடாகக் கொண்டு சாகியைத் தொடங்கினோம். நாங்கள் அந்த பாய்ச்சலை இன்று எங்களை நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்ததில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். நான் சுஸ்ருதியில் சிறந்த பிஸினஸ் பார்ட்னரைக் கண்டேன், எங்கள் எண்ணங்கள் மற்றும் யோசனைகள் சீராக இருந்ததால், தொழில்துறையில் சாகி ஒரு பெரிய பிராண்டாக வளர முடியும் என்பதை என்னை உறுதியாக நம்ப வைத்தது.


ஒரு தொழிலதிபராக சாகியுடன் இணைந்தது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவுகளில் ஒன்றாகும். நான் எப்போதுமே ஃபேஷன் துறையில் ஆர்வமாக இருந்தேன், எனவே அது எனக்கு ஒரு சரியான தேர்வாக இருந்தது. அதனால் சாகி தூய்மையான அன்பில் பிறந்தது எனலாம். இது எனக்கு ஒரு வணிகம் மட்டுமல்ல, ஒரு ஆய்வும் கூட. உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அதே சமயம் மலிவு விலையில் தினசரி உடைகள் வகையிலான உடைகளை வழங்கும் ஒரு பிராண்டை உருவாக்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். சாகியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.


மேலும்  தீபாவளிக்கு சமந்தா என்ன உடையைத் தேர்வு செய்தார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் மினிமல் ரகங்களை விரும்புபவள். என்ன உடுத்துவது என்பதை என்னால் தீர்மானிக்க முடியாவிட்டால், என் தோற்றத்தை நிறைவு செய்ய எவர்கிரீன் புடவையுடன் குறைந்தபட்சம் பளிச்சிடும் சில நகைகளைத் தேர்வு செய்து அணிந்து கொள்வேன். கூல் பேஸல் ஷேட்களை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்கிறார் அவர்.