‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, முன்பதிவில் கிட்டத்தட்ட 17 கோடி வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. உலகம் முழுதும் வெளியான இத்திரைப்படத்தை, சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் திருவிழா போல கொண்டாடினர். 5,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப்படம், இந்த ஆண்டு வெளியான விக்ரம் உட்பட அனைத்து தமிழ் படங்களின் வசூலையும் முறியடித்து சாதனை படைத்து இருக்கிறது.
முன்னதாக பொன்னியின் செல்வன் படம், வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்தது. இதையடுத்து, படத்தின் வசூல் குறித்த தரவுகளை லைகா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதன்படி, திரைப்படம் வெளியான அன்றைய தினம் 80 கோடி வசூல் செய்ததாகவும், தமிழகத்தில் மிக விரைவாக 100 கோடியை எட்டிய படமாக மாறியிருப்பதாகவும் அறிவித்தது.
தொடர்ந்து 300 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அண்மையில் படம் 400 கோடி எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படம் வெளியாகி 25 நாட்கள் ( அக்டோபர் 24 கணக்கின் படி ) நிறைவடைந்திருக்கும் நிலையில், படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.
திரையரங்குகளில் படம் வெளியாகி 4 வாரங்கள் முடிந்திருக்கும் நிலையில், படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்ற சலுகை இருக்கிறது. ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தற்போது வரை நல்ல வசூலை ஈட்டி வருவதால், படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிபோய் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த தகவலின் படி, பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்யப்படலாம் என்றும் தோராயமாக நவம்பர் 11 ஆம் தேதி படம் ஓடிடியில் வெளியிடப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக படத்தின் ஓடிடி உரிமையானது 125 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.