நாம டயட் ல இருக்கலாம்னு முடிவு பண்ணி ஆரம்பிக்கற அன்னைக்குத்தான் எல்லாத்தையும் சாப்பிடணும்னு தோணும். அந்த கடையில், இந்த பலகாரம் நல்லா இருக்கும், இந்த ஏரியால இந்த சாப்பாடு நல்லா இருக்கும்னு தேடி தேடி சாப்பிடத் தோணும். இது டயட்டுக்கு வந்த சோதனையா, இல்ல நமக்கு வந்த சோதனையான்னு தெரியாது. ஆனா ஒவ்வொரு முறை டயட் ஆரம்பிச்ச வேகத்துல முடிஞ்சுடும். எந்த அளவு வேகம்னு கேட்டா காலைல ஆரம்பிச்ச வேகத்துல சாயந்தரம் டயட் முடிஞ்சு போய்டும்.
டயட் இருக்குறது நிறைய டெக்னிக் இருக்கு. அது என்ன தெரியுமா? வாரத்துல ஒரு நாள் நமக்கு புடிச்ச உணவு எடுத்துக்குறது. இப்போ வாரத்துக்கு ஆறு நாள் டயட்டுல இருக்கலாம். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் நமக்கு புடிச்ச சாப்பாடு சாப்பிடலாம்னு மனச சமாதானம் படுத்திவைக்கிறது.
இந்த உடம்பு எந்த சாப்பிடு கொடுத்தாலும், அத செரிச்சு, சத்துக்களை எடுத்துக்கிட்டு, கழிவுகளை வெளியேத்திடும். ஆனால் அத சாப்பிடணும், இத சாப்பிடணும் னு நினைக்கிறது இந்த மனசுதான். இந்த மனச கூட ஏமாத்த வழி இருக்கு.. ஸ்னாக்ஸ் மாதிரியே இருக்கும், ஆனா உடம்புக்கு நல்லது பண்ணும். வயிறும் நிறையும். இது மாதிரி உணவுகளை கொடுத்து அத ஏமாத்தலாம். எளிமையா சொன்னா, ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் கொடுத்தா, மற்ற உணவுகளை தேடாது. இந்த மாதிரி ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்களை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். அந்த வரிசையில் பயிற்சியாளர் யாஸ்மின் கராச்சிவலா அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு ரெசிபிதான் இது.
தேவையான பொருள்கள்
பேரிட்சை பழம் - 120 கிராம்
பாதாம் பருப்பு - 2 ஸ்பூன்
ஆளிவிதை - 2 ஸ்பூன்
சியா விதைகள் - 2 ஸ்பூன்
கோகோ தூள் - 2 ஸ்பூன்
கருப்பு திராட்சை - 2 ஸ்பூன்
இஞ்சி சாறு - 1 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்
இலவங்கப்பட்டை தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருள்களையும், ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர், உருண்டைகளாக உருட்டி, அதன் மேலே, தேங்காய் துருவல் சேர்த்து , 15 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து ருசிக்கலாம். இது மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடியது. புரதச்சத்து நிறைந்தது. ஒரு நாளைக்கு தேவையான புரதம் முழுவதும், இந்த உருண்டையில் இருந்து கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.