ஜொமோட்டோ நிறுவனத்தின் ஐபிஓ இன்று வெளியாக இருக்கிறது. ஜூலை 14 முதல் ஜூலை 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு ஒரு மணி நேரத்திலே விண்ணப்பங்கள் குவிந்தன. குழுக்கள் முறையில் ஒதுக்கீடு கிடைக்கும் என்பதால் இன்னும் இரண்டு நாட்கள் வரையிலும் கூட முதலீடு செய்யலாம். ஒரு பங்கின் விலையாக ரூ.72 முதல் ரூ.76 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு புரோக்கிங் நிறுவனங்களும் கருத்தினை தெரிவித்திருக்கிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் முதலீடு செய்யமாறு பரிந்துரை செய்திருக்கின்றன. ஆனால் பட்டியலாகும் முதல் நாளில் கிடைக்கும் லாபத்துடன் வெளியேறுமாறு அறிவுறுத்தி இருக்கிறது. புரோக்கிங் நிறுவனங்கள் என்ன கூறியிருக்கின்றன என்பதை பார்ப்போம்.
ரெலிகர்:
பட்டியலாகும் நாளில் கிடைக்கும் லாபத்துக்காக விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனம் இன்னும் நஷ்டத்தில்தான் இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இருந்தாலும் நிர்வாகத்துக்கு நீண்ட கால இலக்குகளும் திட்டங்களும் இருக்கின்றன. ஜோமோட்டோவின் நிதி நிலைமையை பார்க்கும்போது குறிப்பிட்ட காலம் காத்திருந்தால் மட்டுமே நல்ல லாபத்தை அடைய முடியும்
யெஸ் செக்யூரெட்டீஸ்
இந்த நிறுவனமும் பட்டியலாகும் நாளில் கிடைக்கும் லாபத்துக்காக முதலீடு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது. கோவிட் காரணாமாக இந்த நிறுவனத்துக்கு ஆர்டர்கள் அதிகம் வரத்தொடங்கியுள்ளன. இதனால் ஒரு டெலிவரி மூலம் கிடைக்கும் லாபம் உயர்ந்துள்ளது. ஆனால் வரும்காலத்தில் இது நிலைத்திருக்குமா என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த நிறுவனத்தின் பிஸினஸ் மாடல் சிறப்பானதாக இருந்தாலும் லாபத்தை அடையும் பாதை இன்னும் கண்ணுக்கு தெரியவில்லை.
மோதிலால் ஆஸ்வால் செக்யூரெட்டீஸ்
ஜொமோட்டோ நிறுவனத்தின் பிஸினஸ் மாடல் சிறப்பானது. இந்த துறையில் பட்டியலாகும் முதல் நிறுவனமும் கூட. ஆனால் இந்த துறையில் உள்ள பிற நிறுவனங்களுடன் ஒப்பீடு செய்யும்போது ஜொமோட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனால் அதிக ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள், முதல் வர்த்தக நாளில் கிடைக்கும் லாபத்துக்காக இந்த பங்கில் முதலீடு செய்யலாம்.
ஐசிஐசிஐ செக்யூரெட்டீஸ்
இந்த நிறுவனம் இன்னும் லாபம் ஈட்டவில்லை. ஆனால் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கிறது. டெக்னாலஜி, பொருளாதார சூழல், கோவிட் மற்றும் வளர்ந்துவரும் இளைஞர்களின் பங்களிப்பு காரணமாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சி சாத்தியம். அதனால் இந்த பங்கில் முதலீடு செய்யலாம்.
ஜெப்ரீஸ்
இந்திய டெக்னாலஜி உலகில் இந்த ஐபிஓ ஒரு முக்கியமான மைல்கல். டெக்னாலஜி நிறுவனங்கள் பணத்தை முதலீடு செய்வது (வாடிக்கையாளர்களை பெறுவதற்காக கூடுதலாக செய்தல் ) குறித்து எப்போது கேள்விகள் இருக்கிறது. கடந்த ஆண்டு செலவு செய்ததை பார்க்கும்போது அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேவையான நிதி இருக்கிறது. பணத்தை செலவு செய்யும் விகித்தத்தை குறித்தால் பத்தாண்டுகளுக்கு தேவையான நிதி இந்த நிறுவனம் வசம் இருக்கும். அதனால் வேறு தொழில்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
ஐஐஎப்எல்
இந்த நிறுவனம் லாபத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 2025-ம் ஆண்டில் 15 சதவீதம் அளவுக்கு நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் இருக்கும். மூன்று காரணங்களால் இது நடக்கும். முதலாவதாக இரு நிறுவனங்கள் மட்டுமே இந்த பிரிவில் உள்ளன. இதில் பெரும் சந்தையை ஜொமோடோ பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவதாக இந்த பேரிடர் காலத்தில் இந்த நிறுவனத்தின் தேவை உயர்ந்திருக்கிறது. வரும் காலத்திலும் இதன் தேவை உயரும். மூன்றாதாக ஒரு டெலிவரி மூலம் கிடைக்கும் வருமானம் சீராக உயர்ந்துவருகிறது. அதனால் இந்த ஐபிஓவுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என ஐஐஎப்எல் கணித்திருக்கிறது.
ஐபிஓ குழுக்கல் மூலம் பங்குகள் கிடைக்கும் பட்சத்தில், லாபம் கிடைத்தால் விற்றுவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்பதைதான் அனைத்து சந்தை வல்லுநர்களும் தெரிவிக்கின்றனர். முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்க!