தலைவலி, வயிற்றுவலி அல்லது வேறு ஏதேனும் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் பலர் உடனடியாக டிஸ்ப்ரின், காம்பிஃப்லாம் அல்லது ப்ரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த வகை மாத்திரைகளின் அதிகப்படியான அளவு ஆபத்துகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வலி நிவாரணிகள் வலியிலிருந்து விரைவான நிவாரணம் அளிக்கின்றன. ஆனால் நாட்பட்ட அளவில் எடுத்துக்கொள்வது நம் ஆரோக்கியத்தில் சில கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஓவர்-தி-கவுண்டர் (OTC) மருந்துகளை மருந்துச் சீட்டு இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதை அடிக்கடி பயன்படுத்தினால், உங்கள் ஆரோக்கியத்தில் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும். இது தவிர, மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் அல்லது அதிகப்படியான அளவு எடுத்துக்கொள்ளுதல் பல பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், இப்யூபுரூஃபனை அதிகமாகப் பயன்படுத்துவதால் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மரணம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்தை உட்கொண்ட பிறகு அத்தகைய நோயாளிகளின் ஆபத்து 59 சதவீதமாக அதிகரிக்கிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கிளினிக்கல் எக்ஸலன்ஸ் ஆய்வின்படி, பராசிட்டமால், ஆஸ்பிரின் மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துபவர்களுக்கு தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு காலப்போக்கில் ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும். இவை தவிர, பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவற்றதாக்கிறது: வலி நிவாரணிகள் தொடக்கத்தில் வலியை நீக்கினாலும், நீண்ட காலத்திற்கு அவை நம் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். ஆக்ஸிகாண்ட்டின் போன்ற வலி நிவாரணிகளின் நீண்டகால பயன்பாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. இதனால் அடிக்கடி உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கல்லீரல் பாதிப்பு: நாம் உட்கொள்ளும் சில மருந்துகள் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். வலி நிவாரணிகளை நாம் அதிகமாகப் பயன்படுத்தும்போது, அதில் உள்ள நச்சுப் பொருட்களை நமது கல்லீரல் உறிஞ்சுகிறது. இது ஆபத்தான மற்றும் உயிருக்கு கெடுதலான நிலைமைக்கு வழிவகுக்கும். அத்துடன் கல்லீரலுக்கு சேதம் விளைவிக்கும்.
இதய பிரச்சனைகள்: சிலர் வலியிலிருந்து விரைவாக நிவாரணம் பெற அதிக வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இதை செய்வதன் மூலம் மருந்து நேரடியாக இரத்தத்தில் செல்கிறது. இந்த மருந்துகள் இதயத்தையும் பாதிக்கலாம். இதை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் கடுமையான இதய பிரச்சனைகள் மற்றும் மாரடைப்பு ஏற்படலாம். குடல் ஆரோக்கியம் மோசமடைகிறது. வலி நிவாரணிகளை உட்கொண்ட பிறகு ஓரிரு நாட்களுக்கு வயிறு மற்றும் குடல் பிரச்சினைகள் ஏற்படலாம். வலி நிவாரணிகளை அதிகமாக எடுத்துக்கொள்வது மலச்சிக்கல், வீக்கம், வாய்வு மற்றும் மூல நோய் ஆகியவற்றை ஏற்படுத்தும், ஏனெனில் வலி நிவாரணிகள் நம் உடலின் ஜீரண ஆற்றலை மட்டுப்படுத்தும்.