ஊரடங்கில் விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு, விவசாயிகள் கோடை சாகுபடியில் மும்முரம்!


 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பலவிதமான கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தி உள்ளது.



 

அதில் அத்தியாவசிய சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மருந்தகங்கள், பால் கடை, உணவகங்கள், முழு நேரம் இயக்கவும். மளிகை, காய்கறி கடைகள்,வங்கிகள் உள்ளிட்ட சிலவற்றை பகல் 12 மணிவரை செயல்படவும், குறிப்பாக வேளாண் சார்ந்த பணிகளுக்கு முழு அனுமதி அளித்துள்ளது. 



 

அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீரை கொண்டு விவசாயிகள் முன்பட்ட குறுவைசாகுபடி பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். ஊரடங்கி இருந்து விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளும் வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மங்கைநல்லூர், கழனிவாசல், பெரம்பூர், அரசூர், சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். 


                                         

 

நிலத்தை சமபடுத்துதல், பாய் நாற்றங்கால் தயார் செய்தல், ஏர் உழுதல், நாற்றுகளை நடவு செய்யும் பணிகளில் தடையின்றி நடைபெறுகிறது. இதுபோல மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி உள்ளிட்ட தாலுக்காவிலும் விவசாயிகள் விவசாய பணிகளில் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.



 

மேலும் சென்றமுறை பயிர் செய்த நெற்பயிர்கள் பருவம் மாறி பெய்த கன மழையில் முற்றிலும் சேதமடைந்து பெரும் இன்னலை சந்தித்த விவசாயிகள். இந்த முறை நல்ல முறையில் விளைச்சல் கண்டு லாபம் பெறுவோம் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 



உழவுக்கு எதுவும் தடையில்லை. ஏனென்றால் உழவு தான் பலருக்கு உயிர் காக்கிறது என்பதால் தான் உழவுப்பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சேற்று நிரம்பிய வயலில் நாற்றுகள் பரப்பி, நடவுப்பணி நடந்து வரும் சூழலை பார்க்கும் போது அவ்வளவு ரம்யமாக உள்ளது. ஒருபுறம் இயந்திர நடவு மற்றொரு புறம் அக்கம்பக்கத்து கதைகளை பேசியபடி இயற்கை நடவில் ஈடுபடும் பெண்கள் என ஊரே அடங்கியருக்க இங்கு மட்டும் அதே புத்துணர்வுடன் நடக்கிறது உழவுப்பணி.



நல்ல விளைச்சல் காணும் என்கிற நம்பிக்கையில் உயிரை பணையம் வைத்து இப்பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் முன்களப்பணியாளர்களே!