இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுகளும் முழு முனைப்பில் வேலை செய்து வருகின்றனர். அத்துடன் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். உதாரணமாக இலவசமாக உணவு கொடுத்தும், போதிய உதவிகளையும் செய்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா முதல் அலையில் பாலிவுட் நடிகர் சோனு சூத் செய்த உதவிகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
தற்போது இரண்டாவது அலையிலும் கன்னட நடிகர் டிரைவராக இருந்து மக்களுக்கு உதவிய செய்தியும் மக்களை அதிகளவில் ஈர்த்தது. இந்தச் சூழலில் அமிதாப் பச்சன் போன்ற பெரிய நடிகர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் அதற்கான நிவாரணங்கள் கொடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பலர் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கு தற்போது அமிதாப் பச்சன் தனது பதிலை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வலைப்பதிவை எழுதியுள்ளார்.
அதில், "எப்போதும் செய்த உதவியை வெளியே சொல்வதைவிட உதவி செய்வதையே நான் பெரிதாக நம்புபவன். வெளியே சொல்லாததால் நான் உதவிகள் செய்யவில்லை என்ற அர்த்தம் இல்லை. நானும் என்னுடைய மகன் அபிஷேக் பச்சனும் கொரோனா காலங்களில் பல உதவிகளை செய்துள்ளோம். இந்த உதவிகள் தொடர்பாக நாங்கள் யாரிடமும் வெளியே கூறியதில்லை. அத்துடன் இந்த உதவிகளால் பயன் அடைந்தவர்களுக்கு கூட நாங்கள் தான் உதவி செய்தோம் என்று தெரியாது.
விவசாயிகளுக்கு சிலர் பயிர் கடன் கட்டுவது முதல் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள் வரை நாங்கள் பல உதவிகளை செய்துள்ளோம். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் உணவு இன்றி தவித்த 5000 பேருக்கு தினமும் இருமுறை உணவு அளிக்க உதவி செய்துள்ளோம். மேலும் கொரோனா தடுப்பு பணியில் இருந்த முன்கள பணியாளர்கள் பலருக்கு பிபிஇ கிட், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்துள்ளோம். மும்பையிலிருந்து கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் செல்ல 2800 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு ரயில் முழுவதும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளோம்.
இவை தவிர புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய சீக்கிய அமைப்புகளுக்கும் நாங்கள் நிதியுதவி செய்துள்ளோம். தற்போது மும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு 20 வென்டிலேட்டர்கள் மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்துள்ளோம். அதேபோல் ஹைதராபாத் பகுதியில் கொரோனா பாதிப்பால் தாய் மற்றும் தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளுக்கான படிப்பு செலவு முழுவதையும் நாங்கள் ஏற்றுள்ளோம். அவர்கள் 10 வகுப்பு வரை சிறப்பாக படிக்கும் பட்சத்தில் அவர்களுடைய மேற்படிப்பு செலவையும் நாங்கள் ஏற்க உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சனின் இந்த வலைப்பதிவு அவரை பற்றி குறை கூறி வந்த பலரின் வாயையும் அடைத்துள்ளது. இனிமேலாவது சமூக வலைத்தளங்களில் மட்டும் கருத்து பதிவு செய்யாமல், செயலில் செய்து காட்ட வேண்டும் என்று அமிதாப் உணர்த்தியுள்ளார்.