மகளிர் குத்துச்சண்டை வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான லவ்லீனா போர்கோஹெயின் சமீபத்தில் தன் சொந்த மாநிலமான அசாமில் பாரம்பரிய அசாம் உடை அணிந்து மாடலாக மாறியுள்ளார்.


9வது வடகிழக்கு விழாவில் உடை வடிவமைப்பாளர்கள் பித்யுத், ராகேஷ் ஆகியோர் அறிமுகப்படுத்தும் திருமண உடைகளின் கீழ் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அனைவரையும் ஈர்த்துள்ளார் லவ்லீனா. 


`லவ்லீனா போர்கோஹெயின் ரோஸ் கோல்ட் சிஃப்னா ஸரி வேலைப்பாடுகள் கொண்ட மரூன் நிறப் பட்டுப் புடவையில் அணிந்ததோடு, பாரம்பரிய அசாம் பாணியிலான பட்டு சால்வை அணிந்திருந்தார்’ என உடை வடிவமைப்பாளர் பித்யுத் பிகாஷ் பகவதி தெரிவித்துள்ளார். 



தொடர்ந்து அவர், `அசாமின் நெசவாளர்கள் அசாம் மணப்பெண்ணுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்கள் மாயக் கைகளால் இந்தப் பட்டு உடையை நெய்கிறார்கள். மிருதுவான மல்பெர்ரி பட்டு உடையான இந்தத் துணியில் சேர்க்கப்பட்டுள்ள சிஃப்னாவும், ஜரிகைப் பணியும் இதற்கான நேர்த்தியைத் தருகிறது’ என்றும் கூறியுள்ளார்.   


அசாமின் மணமகன்களும், மணமகள்களும் அணியும் பாரம்பரிய உடைகளில் வெவ்வேறு பரிணாமங்களை ஏற்படுத்தியிருப்பதாக பித்யுத் பிகாத் பகவதியும், அவருடைய இணை வடிவமைப்பாளருமான ராகேஷ் சேத்தியாவும் தெரிவித்துள்ளனர். 


 






`லவ்லீனாவின் உடையில் சேர்க்கப்பட்டுள்ள சிஃப்னா ஜரிகை வேலைப்பாடு முகலாயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வடிவமைப்பு’ என்றும் பித்யுத் கூறியுள்ளார். 


இதுகுறித்து பேசியுள்ள லவ்லீனா தான் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இந்த அனுபவத்தை ரசித்து மேற்கொண்டதாகக் கூறுகிறார். கடந்த ஆண்டு, டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 69 கிலோவுக்கான எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் லவ்லீனா போர்கோஹெயின்.