கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படுவது ஒரு அழகு பிரச்சினை மட்டுமல்ல; அவை உடல்நலன் ஆரோக்கியமின்மையாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படுவது தூக்கமின்மையை மட்டும் குறிக்கவில்லை என்பதால் எந்த காரணத்தால் கரு வளையம் ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும் என சரும மருத்துவர் செல்வி அறிவுறுத்துகிறார்.
"வைட்டமின்கள் டி, கே மற்றும் ஈ மற்றும் சில வைட்டமின்கள் குறைபாடு காரணமாக கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படும். அதை கவனித்து அதற்கேற்றவாறு உணவையோ சப்ளிமெண்ட்ஸ்களையோ எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சரும மருத்துவர் தீபாலி பரத்வாஜ் தெரிவிக்கிறார்.
போதியளவு தூங்காமல் இருப்பது, ஒவ்வாமை, பல நாட்களாக இருக்கும் தூக்கமின்மை பிரச்சனை, உடலில் போதியளவு நீர்ச்சத்து இல்லாமலை ஆகியவை கண்களுக்கு அருகேயுள்ள மென்மையான சருமத்தை பாதிக்கும். சில வேளைகளில், அது இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஒரு நாளைக்கு தேவையான அளவு தூங்குவது மிகவும் அவசியமானது. நாளொன்றுக்கு குறைந்தது 7 மணி முதல் 8 நேரம் தூங்குவது மிகவும் முக்கியம்.
தூக்கமின்மை பிரச்சனையிருந்தால் மருத்துவரை அணுகலாம்.
கோடை வெயிலில் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கையான உணவுகளை சாப்பிடுவது நல்லது. நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
கண்களுக்கு பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களில் அதிகம் ரசாயனம் இல்லாமல் பார்த்துகொள்ளவும்.
இதோடு, தைராய்டு கோளாறுகள் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் போன்றவைகள் கூட கண்களுக்கு கீழே உள்ள கருமைக்கு காரணமாக இருக்கலாம். ஆரோக்கியமான வாழக்கை முறைகளை பின்பற்றியும் கருவளையம் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. அதற்கான காரணம் என்பதை கண்டறிந்து சிகிச்சை பெறுவதே சிறந்தது என்கிறார் தீபாலி.
இளம்வயதிலேயே கருவளையம் ஏற்பட்டால் அது மரபியல் ரீதியிலானதாக இருக்கலாம். அதற்கு சிகிச்சை அளிப்பது சற்று கடினமானது என்று மருத்துவர் பரத்வாஜ் எடுத்துரைக்கிறார்.
சிலருக்கு கொழுப்பு குறைந்தாலும், உடல் எடை குறைந்தாலும், இது போன்று கண்களுக்கு கீழே கருவளையம் இருக்கும். போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் இது போன்ற பிரச்சனைகள் வரும். உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அதற்கேற்றவாறு சிகிச்சை மேற்கொள்வது நல்லது என்றும் பரிந்துரைக்கின்றனர்.